அமைச்சர் அருண்ராஜ் 
தமிழக செய்திகள்

எச்.ஐ.வி விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பரிசளிப்பு விழா: அமைச்சர் அருண்ராஜ் தொடக்கி வைத்தார்

கல்லூரி மாணவ, மாணவிகளிடையே இணையவழியில் நடைபெற்ற வினாடி வினாப் போட்டிகளில் வெற்றி பெற்ற 41 நபர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர் வழங்கினார்.

சென்னை,

மருத்துவம், மருத்துவ கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் தொற்று குறித்த மாநில அளவிலான தீவிர விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்து, மாவட்ட, மாநில அளவிலான விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

விழிப்புணர்வு பிரச்சாரம்

மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று (12.10.2026) சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் தொற்று குறித்த மாநில அளவிலான தீவிர விழிப்புணர்வு பிரச்சாரத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

கையெழுத்து இயக்கம்

முன்னதாக அமைச்சர், எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் தொற்று குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

உறுதிமொழி

இதனை தொடர்ந்து, கூட்டத்தில் கலந்து கொண்ட அரசு அலுவலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தலைமையில் எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்கள் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.

விழிப்புணர்வு குறும்படம்

பின்னர் அமைச்சர், எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் தொற்று குறித்த விழிப்புணர்வு குறும்படம் மற்றும் பதாகைகளை வெளியிட்டு, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் 20 கல்லூரிகளில் புதிய செஞ்சுருள் சங்கங்களையும், வளரிளம் பருவத்தினர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 20 பள்ளிகளில் வாழ்வியல் திறன் கல்வி பயிற்சி திட்டத்தினையும் தொடங்கி வைத்தார்.

பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்

மேலும், மாவட்ட மற்றும் மாநில அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே இணையவழியில் நடைபெற்ற வினாடி வினாப் போட்டிகளில் வெற்றி பெற்ற 41 நபர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது,

விழிப்புணர்வு பிரச்சாரம்

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு நிறுவனத்தின் வழிகாட்டுதல்களின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 முதல் அக்டோபர் 12 வரை இந்திய அளவில் அனைத்து மாநிலங்களிலும், எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் பால்வினை தொற்று குறித்த, தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம் (Intensified IEC Campaign) நடத்தப்பட்டு வருகிறது. இப்போது சென்னையில் நடப்பது போன்று, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட கலெக்டர்களின் தலைமையில், எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினைத் தொற்று குறித்த “தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம்“ ஆகஸ்ட் 12 முதல் நடைபெற்று வருகிறது. எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினைத் தொற்று குறித்த விழிப்புணர்வு, அனைத்து மக்களுக்கும் சென்றடைவதே இதன் நோக்கமாகும்.

எச்.ஐ.வி 0.19 சதவிகிதம் குறைந்துள்ளது

தமிழ்நாட்டில் 2010ஆம் ஆண்டில் 0.40 சதவிகிதமாக இருந்த எச்.ஐ.வி தொற்று, அரசு மற்றும் அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் இணைந்து, தொடர் தீவிர விழிப்புணர்வு முயற்சிகள் மேற்கொண்டதன் விளைவாக, 2023-ஆம் ஆண்டில் 0.19 சதவிகிதமாக குறைந்துள்ளது. அதாவது எச்.ஐ.வி தொற்று பாதிக்கும்மேல் குறைக்கப்பட்டிருக்கிறது.

புள்ளி விவரங்கள்

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டம் 5-ஆம் கட்டத்தின் (NACP-V) குறிக்கோள் 95:95:95 என்ற நிலையை அடைவதாகும். அதாவது எச்.ஐ.வி தொற்றுள்ளவர்களில் 95 சதவிகித நபர்கள் தங்களது நிலையை அறிந்திருக்க வேண்டும். அவ்வாறு அறிந்தவர்களில் 95 சதவிகித பேர் சிகிச்சையில் இருக்க வேண்டும். மேலும், சிகிச்சையில் இருப்பவர்களில், 95 சதவிகித பேரின் “வைரல் பெருக்க எண்ணிக்கை” கட்டுக்குள் இருக்க வேண்டும் என்ற இலக்கை மார்ச் 2026-க்குள் அடைய வேண்டும். தமிழ்நாட்டை பொறுத்தவரை, 2026-2027ஆம் நிதியாண்டில், 95-95-95 என்ற இலக்குகளை நாம் வெற்றிகரமாக அடைந்திருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கான புள்ளி விவரங்கள் சோச் இணையதளத்தில் காணலாம்.

2656 எச்.ஐ.வி பரிசோதனை மையங்கள்

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு நிறுவனத்தின் நிதியுதவியுடன், தமிழ்நாட்டில் 311 எச்.ஐ.வி / எய்ட்ஸ் - க்கான ஆலோசனை மற்றும் பரிசோதனை மையங்கள் செயல்படுகின்றன. தேசிய சுகாதார குழுமத்தின் நிதியுதவியுடன் 403 ஆலோசனை மற்றும் பரிசோதனை மையங்களும், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும், 2656 முதற்கட்ட எச்.ஐ.வி பரிசோதனை மையங்களும் செயல்பட்டு வருகின்றன.

கட்டணமில்லா தடுப்பு பரிசோதனை

தமிழ்நாட்டில் 58 கூட்டு மருந்து சிகிச்சை மையங்கள் அமைந்துள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், அரசு மாவட்ட மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், 28 தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 172 இணை கூட்டு மருந்து சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில் தற்பொழுது கட்டணமில்லா வகையில், எச்.ஐ.வி / எய்ட்ஸ் தடுப்பு பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. NACP மையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சுமார் 1,55,043 எச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்றுக்குள்ளானோர், கூட்டு மருந்து சிகிச்சையினை பெற்று பயனடைந்து வருகின்றனர்.

நடத்தை மாற்றங்கள்

மேலும், தமிழ்நாட்டில் எச்.ஐ.வி தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ள பாலியல் தொழிலாளர்கள், ஆண் ஓரின சேர்க்கையாளர்கள், ஊசி மூலம் போதை மருந்து உபயோகப்படுத்துபவர்கள், மூன்றாம் பாலினத்தவர் (திருநங்கைகள்), கனரக வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோர் ஆகியோரின் குழுக்களிடையே, “behavioural change- நடத்தை மாற்றங்கள்” கொண்டுவரும் நோக்கில், 104 இலக்கு சார்ந்த அரசுசாரா அமைப்புகள் / சமூக அமைப்புகள் செயல்படுகின்றன.

முக்கிய பணி

அதுமட்டுமின்றி, தாயிடமிருந்து குழந்தைக்கு பரவும் மூன்று வகை தொற்று நோய்களான எச்.ஐ.வி, Syphilis எனப்படுகிற கிரந்தி நோய், மற்றும் ஹெபடைடிஸ்-பி (Hepatitis B) ஆகியவற்றை முற்றிலும் அகற்றுதலும் ஒரு முக்கிய பணியாகும்.

ஏ.ஆர்.வி தடுப்பு சொட்டு மருந்து

எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கு, வாழ்நாள் முழுவதற்குமான ART என்று சொல்லப்படுகிற கூட்டு மருந்து சிகிச்சை மற்றும் தொடர் ஆலோசனை சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு எச்.ஐ.வி பரவுதலை தடுக்கும் வகையில் பிறந்தவுடன் (ARV Prophylaxis) ஏ.ஆர்.வி தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

மாதம் ரூ.3000

எச்.ஐ.வி / எய்ட்ஸ் நோய் தொற்றுக்குள்ளான குழந்தைகள் ஆரோக்கியாமாக வளர்வதற்கும், சத்தான உணவு, இடையராத கல்வி, தொடர்ச்சியான சிகிச்சை பெறுவதற்கும் சமூக பாதுகாப்பு மிகவும் அவசியம். இதனை கருத்தில் கொண்டு, 2026-27ஆம் ஆண்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையில் தமிழ்நாடு முதல்அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, பெற்றோர் இருவரையும் இழந்த எச்.ஐ.வி தொற்றுடன் வாழும் குழந்தைகளுக்கு மாதம் ரூ.3000 ஆகவும், பெற்றோர் ஒருவரை இழந்து எச்.ஐ.வி தொற்றுடன் வாழும் குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 ஆகவும், பெற்றோர்களுடன் வாழும் எச்.ஐ.வி தொற்றுள்ள குழந்தைகளுக்கு மாதம் ரூ.1500 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். மேலும் எச்.ஐ.வி / எய்ட்ஸ் நோயால் பெற்றோர்கள் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கும் (Child not infected) மாதம் ரூ.1500 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். இத்திட்டத்திற்க்கு கூடுதலாக ரூ.1.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் வருகின்ற நவம்பர் மாதம் முதல் எச்.ஐ.வி தொற்றுடன் வாழும் குழந்தைகள் பயன்பெறுவார்கள் என தெரிவித்துக் கொள்கிறேன்.

இறுதியாக, ஏற்கனவே கூறியது போல் தமிழ்நாட்டில் எச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்றை பாதிக்கும் மேல் குறைத்திருக்கிறோம். ஆனால் நம் பணி இன்னும் முழுமை அடையவில்லை. இந்த எச்ஐவி /எய்ட்ஸ் தொடர்பான “தீவிரப்படுத்தப்பட்ட விழிப்புணர்வு பிரச்சாரம்" அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும்.

அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கலெக்டரின் தலைமையில் மாணவ, மாணவியர்களின் மனித சங்கிலி பேரணிகள், ப்ளாஷ்மாப் (Flash Mob Shows) நிகழ்ச்சிகள், ரெட்ரன் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் முதலியவை நடத்தப்பட்டு வருகின்றன. தீவிரப்படுத்தப்பட்ட விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 15-ம் தேதி நமது இந்திய திருநாட்டின் 80-வது சுதந்திர தினத்தன்று, அனைத்து கிராம ஊராட்சிகளிலும், எச்.ஐ.வி / எய்ட்ஸ் தடுப்பு குறித்து, பொதுமக்களால் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

9830 பள்ளிகள்

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் வாயிலாக, 2329 கல்லூரிகளில் செஞ்சுருள் சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு, மாணவ, மாணவியர்கள் மத்தியில், எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை தொற்று மற்றும் நன்னடத்தை மாற்றம் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வளரிளம் பருவத்தினருக்கு தேவையான, எச்.ஐ.வி / எய்ட்ஸ் விழிப்புணர்வு தகவல்களை வழங்குவதற்கு, 8, 9 மற்றும் 11 - ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு, மாநில குழும கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் வாயிலாக, 9830 பள்ளிகளில் வாழ்வியல் திறன் கல்வி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

வினாடி வினா போட்டி

இவ்விழாவில், பங்கேற்றுள்ள ஆசிரியர்களும், கல்லூரி பேராசிரியர்களும் தங்களுடைய ஈடுபாட்டினால் செஞ்சுருள் சங்கங்களின் வாயிலாக எச்.ஐ.வி / எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை மாணவ, மாணவியர்களிடையே ஏற்படுத்தியதற்காக நான் பாராட்டுகிறேன். மேலும், மாநில மற்றும் மாவட்ட அளவிலான வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை மனதார வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன். இப்பணிகள் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

எய்ட்ஸ் இல்லாத சமுதாயம்

நம் மாநிலத்தில் புதிய எச்.ஐ.வி தொற்றுகள் இல்லை என்ற நிலையை அடைய வேண்டும். அதனை அடையவும் முடியும். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு “Sustainable Development Goals என்று சொல்லப்படுகிற நீடித்த வளர்ச்சி இலக்குகளின்” ஒரு முக்கிய இலக்கான 2030-ஆம் ஆண்டுக்குள், “எய்ட்ஸ் இல்லாத சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு செயலாளர் தாரேஸ் அகமது தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குநர் மற்றும் உறுப்பினர் செயலர் ஆர். சீதா லட்சுமி, சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர் (சுகாதாரம்) தாக்கரே ஞானதேவ் ராவ், மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் (பொ)லோகநாயகி, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் ராஜ்மோகன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் ஏ. சோமசுந்தரம் மற்றும் மாநகர நல அலுவலர் ஜெகதீசன் உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT