தமிழக செய்திகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளையும் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மாவட்டம் முழுவதும் செயல்படும் அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் எதிரொலியாக திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று மாவட்டத்தில் பல இடங்களில் பலத்த மழை கொட்டியது. இதில் அதிகபட்சமாக நிலக்கோட்டையில் 60.20 மி.மீ. மழை பதிவானது.

அதேபோல் வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தில் 49 மி.மீ, புகையிலை ஆராய்ச்சி மையத்தில் 48 மி.மீ., பழனியில் 9.60 மி.மீ., கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 3.20 மி.மீ., ரோஜா பூங்காவில் 2.60 மி.மீ., சத்திரப்பட்டியில் 17.20 மி.மீ., காமாட்சிபுரத்தில் 48.80 மி.மீ., திண்டுக்கல்லில் 55.40 மி.மீ. என மொத்தம் 294 மி.மீ. மழை பதிவானது.

ரெட் அலர்ட்

இதற்கிடையே தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்துக்கு இன்றும் நாளையும்‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டது. இதனால் பகல் முழுவதும் மழை வெளுத்து வாங்குமோ? என்ற அச்சத்தில் பொதுமக்கள் இருந்தனர். ஆனால் இன்று பகலில் வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. பின்னர் பகல் முழுவதும் விட்டு, விட்டு சாரல் மழை பெய்தது. அவ்வப்போது பலத்த மழையும் பெய்தது. ஆனால் சில நிமிடங்களில் மழை பெய்வது நின்றது. இதனால் ‘ரெட் அலர்ட்’ அச்சத்தில் இருந்த மக்கள் நிம்மதியடைந்தனர்.

விடுமுறை

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளையும் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மாவட்டம் முழுவதும் செயல்படும் அரசு, தனியார் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (திங்கட்கிழமை) விடுமுறை அளிக்கப்படுகிறது என்று கலெக்டர் துர்கா மூர்த்தி அறிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT