சென்னை,
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக வலுவடைந்து, ஆந்திரா-ஒடிசா கடற்கரைப் பகுதிகளை நோக்கி நகரும் என்றும், தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென் தமிழக பகுதிகள் மற்றும் கேரள பகு திகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவி வருகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து காணப்படுகிறது.
இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக தென்கிழக்கு மற்றும் அதனையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நேற்று காலை மத்திய கிழக்கு மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியது.
இது இன்று (சனிக்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற அதிக வாய்ப்பு உள்ளது. அதனைத் தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது. இதன்காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை நீடித்து வருகிறது.
இந்நிலையில் கனமழை தொடர்வதால் நீலகிரியின் 6 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி உதகமண்டலம், குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுவதாக லட்சுமி பவ்யா தன்னீரு உத்தரவிட்டுள்ளார்.