பிரவீன் குமார் - பா.இரஞ்சித்தின் 
தமிழக செய்திகள்

தையூரில் இளைஞர் ஆணவக் கொலை: நீலம் பண்பாட்டு மையம் கண்டனம்

சாதி வெறிப் படுகொலைகளைத் தடுக்கத் தமிழக அரசு உடனடியாக ‘ஆணவக் கொலை தடுப்பு தனிச்சட்டம்’ இயற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

செங்கல்பட்டு,

சென்னை, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே தையூரில் காதல் விவகாரத்தில் இளைஞர் பிரவீன் குமார் கூலிப்படையால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ‘நீலம் பண்பாட்டு மையம்’ தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

இளைஞர் படுகொலை

தையூர் பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்து வந்தார். அதற்கு அப்பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரவீன் குமார் ஒரு கும்பலால் ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டப்பட்டார். ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

4 பேர் கைது

அக்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருப்போரூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் தொடர்புடைய தையூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை, மணிகண்டன், நந்தீஸ், கவுதம் ஆகிய 4 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சிலரைத் தேடி வருகின்றனர்.

முற்றுகைப் போராட்டமும் போக்குவரத்து பாதிப்பும்

பிரவீன் குமாரின் மரணச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, அவரது உறவினர்களும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் திரண்டனர். குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்யக் கோரியும், ஆணவக் கொலைக்கு நீதி கேட்டும் 500-க்கும் மேற்பட்டோர் சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து ஏற்பட்டது. போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.

நீலம் பண்பாட்டு மையம் கண்டனம்

இச்சம்பவம் குறித்து இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் பண்பாட்டு மையம்’ வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், தமிழகத்தில் தொடரும் சாதிய ஆணவக் கொலைகள் சமூகப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாகக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

தையூர் பிரவீன் கொலைக்குக் காரணமான பின்னணியில் உள்ள அனைவரையும் தப்பவிடாமல் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளதுடன், இதுபோன்ற சாதி வெறிப் படுகொலைகளைத் தடுக்கத் தமிழக அரசு உடனடியாக ‘ஆணவக் கொலை தடுப்பு தனிச்சட்டம்’ இயற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.