தமிழக செய்திகள்

கௌரவப் பேராசிரியர்கள் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் - மு. வீரபாண்டியன்

த.வெ.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்பார்க்கிறது.

திருவாரூர்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழு மற்றும் மாநிலக் குழுக் கூட்டங்கள் 2026 மே 14, 15, 16 தேதிகளில் திருவாரூர் நகரில் தோழர்கள் கோவை எம்.ஆறுமுகம், கே. கேசவராஜ் (திருவாரூர்), ஜி. லதா (வேலூர்) ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

சட்டப் பேரவைத் தேர்தல் முடிவு பரிசீலனை

நடந்து முடிந்த 17-வது சட்டப்பேரவை தேர்தல் குறித்து, திருவாரூரில், 2026 மே 14, 15, 16 தேதிகளில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் பரிசீலனை செய்தது.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி என இரண்டு முக்கிய கூட்டணிகளும், தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்தும் தேர்தல் களத்தில் இருந்தன. இந்த நான்கு முனைத் தேர்தல் களத்தில் வேறு சில கட்சிகள் கூட்டணி அமைத்தும், சில கட்சிகள் தனித்தும் போட்டியிட்டன. மே 4-ல் வெளியான தேர்தல் முடிவுகள் சில திட்டவட்டமான செய்திகளை வெளிப்படுத்தியுள்ளன.

திமுக தலைமையேற்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியும், அஇஅதிமுக, பாஜக அங்கம் பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியும் தோல்வி கண்டுள்ளன. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த இருதுருவ அரசியல் பின்னடைந்துள்ளது.

த.வெ.க.வுக்கு 108 சட்டப்பேரவை உறுப்பினர்களை மக்கள் தந்தனர். ஆனால் அறுதிப் பெரும்பான்மையை அக்கட்சி பெறவில்லை. தனிப்பெரும் கட்சி என்பதை அங்கீகரித்து, ஆட்சியமைக்க அழைக்காமல், 118 உறுப்பினர்களுக்கு மேல் பெரும்பான்மை இருக்கிறது என்பதை நிரூபித்தால் மட்டுமே அழைக்க முடியும் என பல முறை த.வெ.க. தலைவரை கவர்னர் திருப்பி அனுப்பினார். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தொகுதிப் பங்கீட்டின் போது, பொதுவெளியில் பிரச்சினைகளை எழுப்பி, 28 தொகுதிகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சி, 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அது தமிழக வெற்றிக் கழகத்தோடு கூட்டணி அமைப்பதாக கூறி வெளியேறியது. எனினும் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையைப் பெறமுடியவில்லை. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம், ஆட்சியமைக்க தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் ஆதரவு கோரவில்லை என்றும் இடதுசாரி கட்சிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஆதரவு தருமாறும் கேட்டுக்கொண்டது.

நான்கு கட்சிகளின் எட்டு சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஆதரித்ததால் த.வெ.க. ஆட்சியமைக்க 120 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது. இது, கவர்னரின் தடைகளைத் தகர்த்து ஆட்சியமைக்க அழைக்க வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து தமிழக வெற்றிக் கழகம் 2026, மே 10-ஆம் தேதி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. சட்டப் பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு மே 13-ல் நடைபெற்ற போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த அஇஅதிமுகவின் 25 உறுப்பினர்களும், அமமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உறுப்பினரும் ஆதரித்து வாக்களித்ததையும், திமுக வெளிநடப்பு செய்ததையும் மாநிலக்குழு கவனத்தில் கொள்கிறது.

சமூகநீதி, சமநீதி, மதச்சார்பின்மையில் தனது அரசு உறுதியாக இருப்பதாகவும், திமுக அரசின் நலத்திட்டங்களைத் தொடர்வதாகவும் முதல்-அமைச்சர் விஜய் உறுதியளித்து இருக்கிறார். அதனை உறுதிப்படுத்தி, மக்களுக்கு த.வெ.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்பார்க்கிறது. அரசின் செயல்பாடு அடிப்படையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அணுகுமுறையை மேற்கொள்வது என மாநிலக் குழு முடிவு செய்கிறது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்

ஒன்றிய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளன. இதன் காரணமாக பெட்ரோல் லிட்டர் ரூ.103.77, டீசல் லிட்டர் ரூ.95.33 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு உணவு பொருள்களில் விலைகளை கடுமையாக உயர்த்த வழிவகுக்கும். இந்த விலை உயர்வு அடித்தட்டு மக்களின் வாழ்க்கை மீது நடத்தப்படும் தாக்குதலாகும். ஒன்றிய பாஜக அரசும், அதன் மந்திரிகளும் நாட்டின் தேவைக்கு போதுமான எரிபொருள் இருப்பு இருப்பதாக தெரிவித்து வரும் நிலையில், மேற்காசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலைகளை தொடர்ந்து உயர்த்தி வரும் மக்கள் விரோத ஒன்றிய அரசின் நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் வன்மையாக கண்டிப்பதுடன் உயர்த்தப்பட்ட விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம் ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்

விவசாய வேலைகளில் விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட உடல் உழைப்புத் தொழிலாளர்கள் பெரும் பகுதி நாட்கள் வேலையும், வருமானமும் இல்லாமல் கடுமையான வறுமை நிலையில் தள்ளப்பட்டிருந்தனர். கடந்த 2025 டிசம்பர் 21-ஆம் தேதி, விக்ஷித் பாரத்- ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதித் திட்டம் என்ற (விபி- ஜி-ராம் - ஜி) புதிய திட்டத்தை அறிவித்தது. கிராமத் தொழிலாளர் நலனுக்கும், மாநில உரிமைக்கும் எதிரான விபி-ஜி-ராம்-ஜி சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயத் தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். இது தொடர்பாக கடந்த 2025 டிசம்பர் மாதம் பஞ்சாப் மாநில சட்டமன்றத்திலும், 2026 ஜனவரி 23-ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்திலும், பிப்ரவரி 4-ஆம் தேதி கர்நாடக மாநில சட்டமன்றத்திலும், பிப்ரவரி 5 ஆம் தேதி கேரள மாநில சட்டமன்றத்திலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தை வலுப்படுத்தி மீண்டும் அமலாக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த நிலையிலும் ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய முன்வராமல், கடந்த 11.05.2026 ஆம் தேதி விபி ஜிராம்ஜி சட்டத்தை ஜூலை முதல் தேதியிலிருந்து அமலாக்க வேண்டும் என ஒன்றிய அரசு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் விவசாயத் தொழிலாளர் விரோத நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம் வன்மையாக கண்டிப்பதுடன், இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை மீண்டும் அமலாக்க ஒன்றிய அரசுக்கு வலுவான அழுத்தம் தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது.

கௌரவப் பேராசிரியர்கள் ஊதியத்தை உயர்த்தி வழங்குக

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பத்தாண்டுகளுக்கு முன்பு நியமனம் செய்யப்பட்ட 8500-க்கும் அதிகமான கௌரவப் பேராசிரியர்கள் குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு யுஜிசி நிர்ணயித்துள்ள ஊதியமான ரூ 57,700 வழங்க வேண்டிய நிலையில் ரூ.30 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இது முனைவர் பட்டப்படிப்பில் ஆய்வு மாணவர்கள் பெறுகிற உதவித் தொகைக்கும் குறைவான தொகையாகும். கௌரவ பேராசிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை தமிழ்நாடு அரசு உடனடியாக தடுத்து நிறுத்தி, யுஜிசி நிர்ணயித்துள்ள ரூ.57,700 ஊதியம் வழங்க வேண்டும் என்றும், இதுவரை வழங்கப்படாத மே மாத ஊதியத்தையும் சேர்த்து வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.

மதுபானக் கடைகள் மூடப்படுவதற்கு வரவேற்பு-பணியாளர் பணிப் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும்

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்தவுடன் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவை அமைந்துள்ள எல்லையில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்கு அப்பால் உள்ள மதுபானக் கடைகள் மூடப்படும் உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்கள் நலன், பொது அமைதியை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் விஜய் மேற்கொண்ட நடவடிக்கைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம் வரவேற்கிறது. அரசு வரையறுத்துள்ள இதே எல்லைக்குள் உள்ள எஃப் எல் 2, மனமகிழ் மன்றங்கள் நடத்தி வரும் மதுபான விற்பனை மையங்களையும் மூடுவதற்கு உத்தரவிட வேண்டும். அதே சமயம் 2003-ஆம் ஆண்டில் அரசின் அழைப்பை ஏற்று, மதுபான விற்பனைப் பிரிவில் சேர்ந்து 23 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் பணியாளர்களை அரசின் பிற துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரந்தரப் பணியாளர்களாக, பணியமர்வு செய்ய வேண்டும் என முதல்-அமைச்சர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

பட்டாசு தொழில் சம்பந்தமான தீர்மானம்

இந்தியாவில் பட்டாசு தொழில் என்றால் சிவகாசி நகரம் தான் நினைவுக்கு வருகிறது. சிவகாசியை சுற்றி நடைபெறும் பட்டாசு தொழிலில் பல லட்சம் குடும்பங்கள் நேரிலும் மறைமுகமாகவும் ஈடுபட்டு ஜீவனம் கழித்து வருகிறார்கள். இந்த வாழ்க்கை உயிரை பணயம் வைத்து நடைபெறும் வாழ்க்கையாக மாறிவிட்டது. உயிரைக் காக்க உழைப்பு என்பது மாறி உயிரைக் கொடுத்து உழைப்பு, திரும்பி வந்தால் தான் வாழ்க்கை என்று ஆகிவிட்டது.

அடிக்கடி ஏற்படும் வெடி விபத்துக்கள் உயிர் பலிகள் தொடர்கின்றது. விபத்தை தடுக்க அரசு எடுக்கும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. விபத்து தொடர்வதால் தொழிலாளர்களிடம் பீதியும், அச்சமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அச்சத்திலேயே வாழ வேண்டிய நிலை உள்ளது. எனவே மாற்று தொழில் செய்யலாமா என்ற மறு சிந்தனையும் தொழிலாளர்களிடம் ஏற்படுவது நியாயமாக தெரிகிறது. மாற்றுத்தொழில் ஏற்பாடு செய்ய வேண்டும். முறையான அனுமதி பெற்று தொழில் நடைபெறக்கூடிய எட்டு நிறுவனங்களில் விபத்து என்பது கடந்த 20 ஆண்டு காலமாக இல்லை. அனுமதி பெறுவதிலேயே முறையற்ற நடவடிக்கைகளை பின்பற்றி தொழில் நடத்துபவர்கள் விபத்துக்கு காரணமாக மாறுகிறார்கள். விபத்து தடுக்கப்பட்டு விபத்தில்லா பட்டாசு தொழிலாக நடைபெற தொடர் நடவடிக்கைகள் அவசியம்.

மொழித் திணிப்பு உள்ளடக்கம் கொண்ட பிஎம்ஸ்ரீ திட்டத்தை தமிழக அரசு எதிர்க்க வேண்டும்

பாஜகவின் ஒன்றிய அரசு “இந்துத்துவா” கருத்தியலையும், சமஸ்கிருதம், இந்தி மொழித் திணிப்பையும் உள்ளடக்கமாகக் கொண்ட பிஎம்ஸ்ரீ திட்டத்தை தமிழ்நாடு அரசு ஆரம்ப நிலையில் இருந்தே எதிர்த்து வருகிறது. இத்திட்டத்தை ஏற்க வேண்டும் என நிர்பந்தித்து வரும் ஒன்றிய அரசு, தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்திற்கு நிதியை வழங்க மறுத்து விட்டது. மாநில அரசின் சொந்த நிதிப் பொறுப்பில் கல்வித்துறை பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஒன்றிய அரசு சென்ற 07.05.2025 ஆம் தேதி பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்று கையெழுத்து போட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசும் பிஎம்ஸ்ரீ திட்டத்தை உறுதியுடன் நிராகரிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம் தமிழ்நாடு முதல்-அமைச்சரை கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கபட்டுள்ளது.