ஏஐ படம் 
தமிழக செய்திகள்

தக்கலையில் கோர விபத்து; கல்லூரி மாணவியின் உயிரை பறித்த டாரஸ் லாரி

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்த மாணவி காட்லின் அபினா, நேற்று இரவு திருச்சிக்கு புறப்பட்டார்.

குமரி மாவட்டம் களியல் சிற்றாற்றின்கரை பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ். இவரது மகள் காட்லின் அபினா (19). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறை கிடைக்கும் போது ஊருக்கு வந்து செல்வார். அதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்த மாணவி காட்லின் அபினா, நேற்று இரவு திருச்சிக்கு புறப்பட்டார். அவரை நாகர்கோவிலில் இருந்து ரெயிலில் ஏற்றி விடுவதற்காக அவரது தந்தை கிறிஸ்துதாஸ், மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

இரவு 9.30 மணியளவில் தக்கலை எம்.ஜி.ஆர். சிலை அருகே தந்தை-மகள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டாரஸ் லாரி, அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தந்தை-மகள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். மாணவி காட்லின் அபினா மீது டாரஸ் லாரி ஏறி இறங்கியதால், அவரது உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தந்தை கிறிஸ்துதாஸ் காயமடைந்தார்.

இதையடுத்து அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் கிறிஸ்துதாஸை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த நேரத்தில் அந்த பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். பத்மநாபபுரம் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீலன் தலைமையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, விபத்து ஏற்படுத்திய லாரியை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. பின்னர் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். விபத்தில் உயிரிழந்த காட்லின் அபினாவின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்கு காரணமான டாரஸ் லாரியை பறிமுதல் செய்துள்ளனர். அதை ஓட்டிய நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டாரஸ் லாரிகளால் ஏற்படும் விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருவது குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.