ஈரோடு,
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மாமனாரை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானி மேலத்தெருவைச் சேர்ந்தவர் வடிவேல். இவரது மருமகன் ஆரோக்கியம். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே குடும்பப் பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் இருவருக்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ஆரோக்கியம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாமனார் வடிவேலைச் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த வடிவேலின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் மருத்துவமனைப் பணியாளர்கள் விரைந்து வந்து அவரை மீட்டனர். உடனடியாக அவர் அதே மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரிவில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் நடந்த உடனே அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஆரோக்கியத்தை மடக்கிப் பிடித்தனர். பின்னர் போலீசார் அவரை ஈரோடு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் ஆரோக்கியத்தை கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள், பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த மருத்துவமனை வளாகத்தில் பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.