தமிழக செய்திகள்

திருப்பூரில் நடந்த கொடூரம்: 4 மாதங்களில் கசந்து போன காதல்.. கர்ப்பிணியை கொன்று கணவர் தற்கொலை

அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவியை வேலைக்கு செல்ல கூறி அவர் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

திருப்பூர்,

திருப்பூரில் திருமணமான 4 மாதத்தில், கர்ப்பிணியான காதல் மனைவியை அடித்துக்கொன்று தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

நர்சிங் மாணவியுடன் காதல்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அம்மாசமுத்திரத்தை சேர்ந்தவர் முருகானந்தம். அவருடைய மகன் சரவணக்குமார் (வயது 27). 9-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர், திருப்பூரில் உள்ள வெல்டிக் பட்டறையில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

மேலும், இவர் ஒரத்தநாடு கார்காடிப்பட்டியை சேர்ந்த வல்வராசு என்பவரது மகள் ஸ்ரீமதி (வயது 19) என்பவரை கடந்த ஓராண்டாக காதலித்து வந்தார். ஸ்ரீமதி தஞ்சாவூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பி.எஸ்சி 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

4 மாதங்களுக்கு முன்பு திருமணம்

காதல்ஜோடி 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் அவர்களை சமாதானப்படுத்தி கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்துக்கு பிறகு சரவணக்குமார், திருப்பூர் கருமாரம்பாளையம் மூகாம்பிகை நகர் 2-வது வீதியில் வாடகைக்கு வீடு எடுத்தார். அங்கு புதுமண தம்பதிகள் தங்களது இல்வாழ்க்கையை இனிதாக தொடங்கினர். இதன் பயனாக ஸ்ரீமதி கர்ப்பமானார்.

இதனிடையே சரவணக்குமார் அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியை வேலைக்கு செல்ல கூறி அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. இதன் காரணமாக ஸ்ரீமதி, கணவருடன் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அதன்பிறகு அவருடன் சமாதானம் பேசிய சரவணக்குமார் மீண்டும் ஸ்ரீமதியை திருப்பூருக்கு அழைத்து வந்தார்.

அடித்துக்கொலை

இந்தநிலையில் கடந்த 29-ந்தேதி கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, தான் காதலித்து கரம் பிடித்த மனைவி என்று கூட பாராமல், ஸ்ரீமதியை வயிறு உள்பட பல்வேறு இடங்களில் சரவணக்குமார் சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். இதனால் நிலைகுலைந்த ஸ்ரீமதி, கர்ப்பம் கலைந்து கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டு வீட்டிற்குள்ளேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்து விட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சரவணக்குமார் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றவர், நேற்று முன்தினம் இரவு மீண்டும் வீட்டிற்கு வந்தார். அப்போது மனைவி அழுகிய நிலையில் பிணமாக கிடப்பதை பார்த்த அவர், மின்விசிறியில் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.