தமிழக செய்திகள்

திருச்சியில் பயங்கரம்: பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை

திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆயில் மில் சோதனைச்சாவடி காமராஜர் நகர் வினோபாஜி தெரு பகுதியில் மோட்டார் சைக்கிளில் பாதுஷா சென்று கொண்டிருந்தார்.

திருச்சி அரியமங்கலம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் மகபூபாஷா. இவரது மகன் பாதுஷா (வயது 24). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். பிரபல ரவுடியான பாதுஷா மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. நேற்று முன்தினம் நள்ளிரவு திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆயில் மில் சோதனைச்சாவடி காமராஜர் நகர் வினோபாஜி தெரு பகுதியில் மோட்டார் சைக்கிளில் பாதுஷா சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் கொண்ட மர்ம கும்பல் மோட்டார் சைக்கிளில் அவரை பின்தொடர்ந்து வந்தது. இதற்கிடையே அப்பகுதியில் உள்ள ஒரு திருப்பத்தில் மோட்டார் சைக்கிளை திருப்பியபோது பாதுஷா நிலைத்தடுமாறி கீழே தவறி விழுந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம ஆசாமிகள் தாங்கள் கொண்டு வந்த அரிவாளால் பாதுஷாவை வெட்ட முயன்றனர்.

அரிவாளால் வெட்டிக்கொலை

இதில் அதிர்ச்சியடைந்த பாதுஷா மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இருப்பினும் மர்ம ஆசாமிகள் ஓட ஓட விரட்டிச் சென்று அரிவாளால் பாதுஷாவை சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அந்த மர்ம ஆசாமிகள் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் மற்றும் திருச்சி போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்ரே ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பாதுஷாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெண்ணுடன் தொடர்பு

இந்த கொலை சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர். அதில் 3 பேர் கொண்ட மர்ம கும்பல் பாதுஷாவை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது.

முதற்கட்ட விசாரணையில் அரியமங்கலத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பாதுஷா தொடர்பில் இருந்துள்ளார். இதுதொடர்பான தகராறில் கடந்த செப்டம்பர் மாதம் பாதுஷாவை மர்ம ஆசாமிகள் கொலை செய்ய முயன்றனர். இதில் அவர்கள் அரிவாளால் வெட்டியதில் பாதுஷாவின் வலது கையின் கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரல் துண்டானது. இருப்பினும் அந்த பெண்ணுடன் பாதுஷா தொடர்பை கைவிடவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம ஆசாமிகள் பாதுஷாவை கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தனிப்படை

மேலும், ரவுடிகள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.கொலையாளிகளை பிடிக்க திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சியில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.