கடலூர்,
கடலூர் அருகே பெரிய காட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 31). இவர் கார் டிரைவராக பணி புரிந்து வருகிறார்.
இவர் இன்று கடலூர் ரங்காரெட்டிப்பாளையம் அருகே கார் ஓட்டி வந்தார். புதுச்சேரி எல்லை அருகே உள்ள இரட்டைசாவடி அருகே தனது காரை நிறுத்தி சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சசிக்குமார் மீது நாட்டு வெடிகுண்டை வீசினர். இதனை தொடர்ந்து அந்த மர்ம நபர்கள் அவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு, தப்பி ஓடினர்.
இதில் பலத்த காயமடைந்த சசிக்குமார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சசிகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமவனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சசிகுமாரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதனிடையே அவர் கொலை செய்யப்பட்ட காரணம் குறித்தும் புதுச்சேரி மற்றும் கடலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.