நாகர்கோவில்,
நாகர்கோவில் அருகே உள்ள சுசீந்திரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஒரு தனியார் பள்ளியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் வெளி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சரவணகுமார் (வயது 35) என்ற தொழிலாளி கடந்த 10 நாட்களுக்கு முன்பு இங்கு வேலைக்கு அழைத்து வரப்பட்டார்.
இந்தநிலையில் நேற்று சரவணகுமாரும். அவருடன் வேலை பார்த்து வந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த தங்கபாண்டி (40) என்ற தொழிலாளியும் இணைந்து மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறியது. தகராறு முற்றியதால் அவர்களை சக தொழிலாளர்கள் சமாதானம் செய்து விலக்கி விட்டனர். இதையடுத்து இருவரில் ஒருவரை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தால் பிரச்சினை முடிவுக்கு வரும் என்று சக தொழிலாளர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி தங்கபாண்டியை ஊருக்கு அனுப்பி வைப்பதற்காக சக தொழிலாளர்கள் அவரை நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். ஆனால் நெல்லை ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் யார்டு விரிவாக்க பணிகள் காரணமாக அந்த மார்க்கத்தில் செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. இதனால் ஏமாற்றமடைந்த தங்கபாண்டி மீண்டும் கட்டுமான பணி நடைபெறும் இடத்திற்கே திரும்பி வந்தார்.
அப்போது, சரவணகுமார் அங்கு மதுபோதையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். இதை கண்டதும் தங்கபாண்டிக்கு மீண்டும் ஆத்திரம் ஏற்பட்டது. உடனே அவர் அருகில் கிடந்த சிமெண்டு கல்லை எடுத்து சரவணகுமாரின் தலையில் போட்டார். இந்த கொடூர தாக்குதலில் படுகாயமடைந்த சரவணகுமார், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தங்கபாண்டி அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இதை பார்த்து சக தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சுசீந்திரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சரவணகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய தங்கபாண்டியை பிடிப்பதற்காக போலீசார் அந்தபகுதி முழுவதும் தீவிரமாக தேடி வருகின்றனர். முதற்கட்டமாக சக தொழிலாளர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.