விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வைத்தியலிங்கபுரம் வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன், மின்வாரிய ஊழியர் இவருடைய மனைவி கலைச்செல்வி ( 25). இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் முனியராஜ் (36). இவருடைய மனைவி ஐஸ்வர்யா (33). ஐஸ்வர்யா வீட்டுக்கு சென்று கலைச்செல்வி பேசுவது வழக்கம். கணேசன் நேற்று வழக்கம்போல் பணிக்கு சென்று விட்டார். கலைச்செல்வி மட்டும் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கணேசன் பணி முடிந்து மாலையில் வீட்டுக்கு வந்தார். அப்போது மனைவியை காணவில்லை. எனவே முனியராஜ் வீட்டுக்கு தேடிச்சென்றார். அங்கு கலைச்செல்வி கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் வன்னியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது வீட்டில் முனியராஜ், ஐஸ்வர்யா ஆகிய இருவரும் இல்லை. சற்றுநேரத்தில் இருவரும் வீட்டுக்கு வந்தனர்.
அவர்களிடம் போலீசார் சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. முனியராஜ், ஐஸ்வர்யா ஆகிய இருவரும் கலைச்செல்வியிடம் தங்களுக்கு கடன் அதிகமாக இருப்பதாகவும், அதனை அடைக்க நகையை தரும்படி கேட்டதாக கூறப்படுகிறது. நகைகளை தர கலைச்செல்வி மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த முனியராஜ் அங்கு கிடந்த மின்ஒயரை எடுத்து கலைச்செல்வியின் கழுத்தை நெரித்தார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.
பின்னர் கலைச்செல்வி அணிந்திருந்த 3½ பவுன் நகையை அவர்கள் கழற்றிக்கொண்டனர். அந்த நகையை உடனே அடகு வைத்து பணமாக மாற்றியதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து முனியராஜ், ஐஸ்வர்யா ஆகிய 2 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நகைக்காக இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.