சென்னை,
தமிழ்நாடு சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்திய திருநாவுக்கரசு உள்பட 9 பேரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த குதிரைபேர விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், அவரது தம்பி அசோக் குமாருக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து, விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி இருவருக்கும் போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால், அவர்கள் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகினர்.
இதையடுத்து இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் இருவரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் ஐகோர்ட்டு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வக்கீல், "ரூ.35 கோடி பேரம் என்பது யூகம்தான். குதிரை பேரத்துக்கு ஆதாரம் உள்ளதா? குதிரை பேரம் எனக் கூறப்படும் தொலைபேசி உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளதா? திருநாவுக்கரசு, அசோக் குமார் ஒரே நாளில் ஈரோட்டில் இருந்தது ஒரு ஆதாரமா? 59 எம்எல்ஏக்களை கொண்ட திமுகவால் எப்படி ஆட்சியை கவிழ்க்க முடியும்?
உண்மையில் இந்த வழக்கை போலீசார்தான் பெரிதாக்கி வருகின்றனர். இப்போது சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தால் ஆட்சியை கவிழ்க்க முடியாது. செந்தில் பாலாஜி தலைமறைவாகமாட்டார். விசாரணைக்கு ஒத்துழைப்பார். எனவே முன்ஜாமீன் வழங்க வேண்டும்" என்று வாதிட்டார்.
தமிழ்நாடு அரசு தரப்பில், "எம்.எல்.ஏ.வுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதற்கான சதித் திட்டம் சென்னையின் முக்கிய இடங்களில் தீட்டப்பட்டன. கிண்டி நட்சத்திர ஓட்டல், ஈ.சி.ஆரில் உள்ள ஓட்டலில் ஆலோசனைக் கூட்டங்கள் நடந்துள்ளன. சதியை நிரூபிக்க சிசிடிவி ஆதாரங்கள் ஓட்டல்களில் இருந்தன. அவற்றில் சில காட்சிகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளன" என்று வாதிடப்பட்டது.
இந்த நிலையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இளந்திரையன், செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். அதன்படி தினமும் காலையும், மாலையும் இருவரும் சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.