சென்னை,
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழலை கருத்தில் கொண்டு இந்தியாவில் சமையல் கேஸ்(LPG) தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்கவும், உள்நாட்டுத் தேவையை பூர்த்தி செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக கடந்த புதன்கிழமை மத்திய அரசு வெளியிட்ட உத்தரவில், “இந்தியாவில் செயல்படும் அனைத்து எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களும், புரொப்பேன்(Propane) மற்றும் பியூட்டேன்(Butane) மூலப்பொருட்களை எல்.பி.ஜி.(LPG) உற்பத்திக்கு அதிகபட்சமாக பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். அந்த எல்.பி.ஜி. எரிவாயு 3 பொதுத்துறை எண்ணெய் வணிக நிறுவனங்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனங்கள் (Refiners) இனிமேல் பெட்ரோகெமிக்கல் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் புரோப்பேன் மற்றும் பியூட்டேன் போன்ற மூலப்பொருட்களை சமையல் கேஸ் உற்பத்திக்கு திருப்பி விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, இந்தியன் ஆயில் (Indian Oil), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL), பாரத் பெட்ரோலியம் (BPCL) போன்ற பொதுத்துறை நிறுவனங்களுக்கு மட்டுமே சமையல் கேஸ் விநியோகிக்கப்பட வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடுகிறது.
அது மட்டுமின்றி, இந்த 3 பொதுத்துறை எண்ணெய் வணிக நிறுவனங்களும் வீட்டு உபயோகத்திற்கு மட்டுமே எல்.பி.ஜி. சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசு தனது உத்தரவில் கூறியுள்ளது. இதனால் வணிக பயன்பாட்டு சிலிண்டர்களின் விநியோகம் தற்காலிகமாக கைவிடப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விநியோகத்திற்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த சங்கத்தின் தலைவர் எம்.வெங்கடசுப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் முதன்மையாக வணிக எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்துவதையே சார்ந்துள்ளன. வணிக எரிவாயு சிலிண்டர்களின் விநியோகம் முறைப்படுத்தப்படாவிட்டால், ஓட்டல்கள் மற்றும் உணவகங்களின் செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படும். இது இந்த துறையை சார்ந்திருக்கும் லட்சக்கணக்கான பணியாளர்களை பாதிக்கும். எனவே, வணிக எரிவாயு சிலிண்டர்களின் விநியோகத்தை முறைப்படுத்த எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.