சென்னை,
சென்னையில் வணிக கியாஸ் சிலிண்டர் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளதால், பெரும்பாலான ஓட்டல்களில் மெனுக்கள் குறைக்கப்பட்டுள்ளன. சில ஓட்டல்கள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.
இதனால், ஓட்டல் உரிமையாளர்கள் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வாங்குவதை குறைத்துக் கொண்டுள்ளனர். இதன் தாக்கமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விற்பனை குறைந்துள்ளது. இதனால், காய்கறிகளின் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது
தக்காளி, கத்தரிக்காய், கேரட், முட்டைகோஸ், சுரைக்காய், சவ்சவ் போன்ற காய்கறிகள் கிலோ ரூ.10 என்ற விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோல், பெரிய வெங்காயம் (பல்லாரி) ரூ.18, சின்னவெங்காயம் ரூ.40, உருளைக்கிழங்கு ரூ.18, உஜாலா கத்தரிக்காய் ரூ.20, முருங்கைக்காய் ரூ.30, வெண்டைக்காய் ரூ.35, பீன்ஸ் ரூ.50, பீட்ரூட் ரூ.20, அவரைக்காய் ரூ.30, கோவக்காய் ரூ.25, பாகற்காய் ரூ.20, பீர்க்கங்காய் ரூ.30, புடலங்காய் ரூ.20, பச்சை மிளகாய் ரூ.25, இஞ்சி ரூ.55 என்ற விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
விற்பனை குறைந்தது தொடர்பாக வியாபாரி ஒருவர் கூறியதாவது:-
இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் காரணமாக வணிக கியாஸ் சிலிண்டர் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளதால், பெரும்பாலான ஓட்டல்களில் குறைந்த வகையிலான உணவுகளே தயாரிக்கப்படுகின்றன. இதனால், காய்கறி பயன்பாடும் பாதியாக குறைந்துபோனது. கோயம்பேடு மார்க்கெட்டில் 30 சதவீதம் அளவுக்கு காய்கறி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களிலும் இதே நிலை தொடர்ந்தால், ஓட்டல்கள் மற்றும் கேட்டரிங் நிறுவனங்கள் முழுமையாக மூடப்படும் நிலை ஏற்படும். காய்கறிகளும் தேக்கமடைந்து வீணாகும். விவசாயிகள், வியாபாரிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.