கடலூர்,
கடலூர் மாவட்டம், வடலூர் ஆசிரியர் நகர், நடனசபாபதி முதல் குறுக்குத் தெருவை சேர்ந்தவர் முகமது ரபிக் (வயது 55). இவர் வடலூரில் கட்டுமான இரும்பு கம்பிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சாராபீவி (48). நேற்று காலை வீட்டில் சமையல் செய்து கொண்டிருக்கும் போது திடீரென கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு, வெடித்து சிதறியது. இதில் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியே புகை மண்டலமாக காணப்பட்டது. இதுபற்றி அறிந்த குறிஞ்சிப்பாடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதோடு வீட்டுக்குள் இருந்த மேலும் 3 சிலிண்டர்களை பாதுகாப்புடன் வெளியே எடுத்து வந்தனர்.
அப்போது கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கிய சாராபீவி படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வடலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.