தமிழக செய்திகள்

கோவையில் வீட்டின் கதவை உடைத்து 4½ பவுன் நகை, பணம் கொள்ளை!

நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை,

கோவை போத்தனூர், திருமுறை நகர் பகுதியைச் சேர்ந்த ஜக்கரியா (24) செட்டிபாளையம் சாலையில் உள்ள நபி நகரில் இரும்புப் பழம்பொருட்கள் வைக்கும் குடோன் நடத்தி வருகிறார். இவரது தந்தை திருமுறை நகர் பகுதியில் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் காலை ஜக்கரியா தனது மனைவி மற்றும் குழந்தைகளை தந்தையின் வீட்டிற்கு அனுப்பிவிட்டு குடோனுக்குச் சென்றுள்ளார். பின்னர் இரவு வீட்டிற்கு வந்து குளித்துவிட்டு மீண்டும் தந்தையின் வீட்டிற்குச் சென்று தங்கியுள்ளார்.

மர்மநபர்கள் கைவரிசை

நேற்று காலை தனது வீட்டிற்கு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, மர்ம நபர்கள் பீரோவின் லாக்கரை உடைத்து அதில் இருந்த 4½ சவரன் தங்க நகைகள், 380 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.12 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ஜக்கரியா அளித்த புகாரின் பேரில், போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT