தமிழக செய்திகள்

வீட்டின் கதவை உடைத்து 24 பவுன் நகை, பணம் கொள்ளை

மானாமதுரை அருகே வீட்டின் கதவை உடைத்து 24 பவுன் நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட்டில் உள்ள அழகு நாச்சியார் புரம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி கோகிலா. இவர்களுக்கு 2 மகன்கள். குமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் இங்குள்ள வீட்டில் கோகிலா, மகன்களுடன் வசித்து வருகிறார். 3 நாட்களுக்கு முன்பு முத்தரசன் கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் அவருடைய மகன்களும் அந்த கிராமத்திற்கு சென்றனர்.

நேற்று கோகிலா தனது வீட்டுக்கு வந்தார். அப்போது கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன. உள்ளே சென்று பார்த்தபோது அலமாரியில் வைத்திருந்த 24 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.70 ஆயிரம் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் சிப்காட் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றியும் ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.