தமிழக செய்திகள்

வீட்டின் கதவை உடைத்து 50 பவுன் நகை, ரூ.7 லட்சம் கொள்ளை – புதுக்கோட்டையில் துணிகர சம்பவம்

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்துக்குட்பட்ட தொண்டைமான் நல்லூர் வீரம்பட்டியில் பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள், 50 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.7 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மர்மநபர்கள் கொள்ளை

வீரம்பட்டியைச் சேர்ந்த விவசாயி மாரியப்பன் (45), ஒப்பந்த அடிப்படையில் சென்ட்ரிங் வேலையும் செய்து வருகிறார். அவரது மனைவி ஷீலாராணி, அப்பகுதியில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவன கேண்டீனில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

நேற்று குழந்தைகள் பள்ளிக்கும், தம்பதியினர் வேலைக்கும் சென்றிருந்த நிலையில், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், பீரோவில் இருந்த 50 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.7 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன், மாத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் உள்ளிட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.