சென்னை,
நகரக் கூட்டுறவு வங்கிகள் (UCB) மற்றும் நகரக் கூட்டுறவு கடன் சங்கங்களில் (UCCS) வீட்டுவசதி கடன்களுக்கான உச்சவரம்பு உயர்வு – பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் வ.காந்திராஜ் அறிவிப்பு. இது தொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள நகர மற்றும் புறநகர பகுதி மக்களின் சொந்த வீடு கட்டும் கனவை நனவாக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு தடையற்ற மற்றும் மேம்பட்ட நிதி உதவிகளை வழங்கும் நோக்கத்துடனும், நகர கூட்டுறவு வங்கிகள் (Urban Cooperative Banks - UCB) மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் (Urban Cooperative Credit Societies - UCCS) மூலமாக வழங்கப்படும் வீட்டுக்கடன்கள் மற்றும் வீட்டு அடமானக் கடன்களுக்கான உச்சவரம்புகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. நகரக் கூட்டுறவு வங்கிகள் (UCB) - இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வழிகாட்டுதல்கள் மீண்டும் வலியுறுத்தல்:
நகரக் கூட்டுறவு வங்கிகள் சிலவற்றில் தனிநபர் வீட்டுக்கடன் உச்சவரம்பு இந்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்த அளவை விடக் குறைவாக வழங்கப்பட்டு வந்ததும், வங்கிக்கு வங்கி வேறுபாடுகள் இருந்ததும் கண்டறியப்பட்டது. பொதுமக்கள் மற்றும் உறுப்பினர்கள் முழுப் பயனடையும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) நடைமுறையில் உள்ள உச்சவரம்புகளின்படி கடன்களை முழுமையாக வழங்கிட நகரக் கூட்டுறவு வங்கிகளுக்கு கூட்டுறவுத் துறை மீண்டும் அறுவுறுத்தியுள்ளது.
· ரூ.100 கோடிக்கு குறைவான வைப்புத்தொகை நிலுவை கொண்ட(Tier 1) நகர கூட்டுறவு வங்கிகள்: தனிநபர் அதிகபட்ச வீட்டுக்கடன் உச்சவரம்பு ரூ.60 லட்சம்.
· ரூ.100 கோடிக்கு மேல் வைப்புத்தொகை நிலுவை கொண்ட (Tier 2) நகர கூட்டுறவு வங்கிகள்: தனிநபர் அதிகபட்ச வீட்டுக்கடன் உச்சவரம்பு ரூ.1.40 கோடி.
2. நகரக் கூட்டுறவு கடன் சங்கங்களில் (UCCS) சமீபத்தில் உயர்த்தப்பட்ட கடன் உச்சவரம்பு
நகரக் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் (UCCS) உறுப்பினர்களின் அதிகரித்து வரும் நிதித் தேவைகளைக் கருத்தில் கொண்டு, கடன் உச்சவரம்பானது சமீபத்தில் பின்வருமாறு கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது:
· ரூ.100 கோடிக்கு குறைவான வைப்புத்தொகை நிலுவை கொண்ட சங்கங்கள்: தனிநபர் அதிகபட்ச கடன் உச்சவரம்பு ரூ.60 லட்சம்.
· ரூ.100 கோடிக்கு மேல் வைப்புத்தொகை நிலுவை கொண்ட சங்கங்கள்: தனிநபர் அதிகபட்ச கடன் உச்சவரம்பு ரூ.1 கோடி.
3. நீண்டகால திருப்பி செலுத்தும் வசதி (20 ஆண்டுகள்)
பொதுமக்களின் மாதாந்திர தவணை சுமையை குறைக்கும் வகையில், நகரக் கூட்டுறவு வங்கிகள் (UCB) மற்றும் நகரக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் (UCCS) ஆகிய இரண்டிலுமே வீட்டுக்கடன்கள் மற்றும் வீட்டு அடமானக் கடன்களுக்கான அதிகபட்ச திருப்பி செலுத்தும் காலம் 20 ஆண்டுகள் (20 Years) வரை நீட்டித்து வழங்கப்பட்டுள்ளது.
· நகரக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்கள் தங்களது கடன் கொள்கைகள் மற்றும் துணைவிதிகளை (Bye-laws) உடனடியாக ஆய்வு செய்து, திருத்தங்களை மேற்கொண்டு மண்டலத் துணைப்பதிவாளரின் ஒப்புதலைப் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
· கடன் பெற விண்ணப்பிக்கும் உறுப்பினர்களின் கடன் மற்றும் திருப்பி செலுத்தும் திறன் உரிய முறையில் பரிசீலிக்கப்படும்.
· தகுதியுடைய உறுப்பினர்கள் தங்களின் அடையாள சான்று, முகவரி சான்று, வருமான சான்று மற்றும் நில/வீட்டு ஆவணங்களுடன் தங்கள் பகுதி நகர கூட்டுறவு வங்கிகள் அல்லது கடன் சங்கங்களை அணுகி இச்சலுகையை பெற்று பயனடையுமாறு கூட்டுறவுத்துறை அமைச்சர் வ.காந்திராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.