சென்னை,
நீதிமன்ற தீவிரவாதம் என்று கடினமான வார்த்தைகளை உபயோகிப்பதை தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தவிர்க்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென்ற சுப்ரீம்கொடுத்த கொடுத்த தீர்ப்பை தமிழக அரசு நிறைவேற்றாமல் எப்போதும் போல உச்சிப் பிள்ளையார் கோவிலிலேயே தீபத்தை ஏற்றியிருக்கிறது. சுப்ரீம்கோர்ட்டினுடைய தீர்ப்பை அமல்படுத்த வேண்டுமென்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டும் அது நிறைவேற்றப்படவில்லை.
சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்தாமல் சுப்ரீம்கோர்ட்டின் நீதிமன்ற அவமதிப்புக்கு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உள்ளாகியிருக்கிறார். தமிழகத்தில் சில கட்சித் தலைவர்கள் தாங்கள் விரும்பிய தீர்ப்பு வரவில்லை என்பதற்காக நீதிமன்ற தீவிரவாதம் என்று சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை பெயரிட்டு அழைத்திருக்கிறார்கள்.
காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டுமென்று சுப்ரீம்கோர்ட்டு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்ட பொழுது கர்நாடக அரசு மறுத்து, சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பையே கர்நாடக அரசு மதிக்காததால் மத்திய அரசு ராணுவத்தைக் கொண்டு சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
எதிர்காலத்தில் சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்கவில்லை என்று சுப்ரீம்கோர்ட்டில் முறையீடு செய்யும் பொழுது, தமிழகமும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மதிக்கவில்லை என்று திருப்பரங்குன்றம் நிலைபாட்டை உதாரணமாக சொல்வதற்கு வாய்ப்பிருக்கிறது.
தமிழகமும் சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பை நிறைவேற்றாமல் மறுக்கும் பொழுது கர்நாடக அரசு சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பை நிறைவேற்றவில்லை என்று கேள்வி கேட்கக்கூடிய தார்மீக உரிமையை தமிழ்நாடு அரசு இழந்தது போல் ஆகாதா! மொத்தத்தில் இந்த பிரச்சனைகள் தீர்க்க முடியாத சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.
ஆனாலும் சுப்ரீம்கோர்ட்டின் ஒரு தீர்ப்பு தாங்கள் விரும்பிய வகையில் இல்லை என்பதற்காக நீதிமன்ற தீவிரவாதம் என்று கடினமான வார்த்தைகளை உபயோகிப்பதை தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.