தமிழக செய்திகள்

அரசு ஒதுக்கீடு 600 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது எப்படி? - அமைச்சர் அருண்ராஜ்

சமூக நீதியை பேசும் கட்சிகளை சேர்ந்தவர்கள் நடத்தும் கல்லூரிகள் தான் இடஒதுக்கீட்டிற்கு எதிராக செயல்படுகின்றனர்.

சென்னை,

அரசு ஒதுக்கீடு 600 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது எப்படி? - சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் விளக்கம். இது தொடர்பாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வாட்ஸ்ஆப் புறநோயாளிகள் முன்பதிவு சேவையை தொடங்கி வைத்த பின், செய்தியாளர்கள் சந்திப்பில் சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் கூறியதாவது:-

உயர்நீதிமன்றம் அனுமதி

தமிழ்நாட்டில் 4 தனியார் மருத்துவ கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்த அனுமதி கோரி தனியார் மருத்துவ கல்லூரிகள் தமிழ்நாடு அரசை அணுகின. தாமதமாக என்ஓசியை மறுத்த காரணத்தினால் தனியார் மருத்துவ கல்லூரிகள் உயர்நீதிமன்றம் சென்று அனுமதி பெற்றன.

கலந்தாய்வு

இந்த தனியார் கல்லூரிகள் அனைத்தும் தற்போது தன்னாட்சி பெற்ற நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாறியுள்ளதால், அவை இனி மாநில அரசின் கலந்தாய்வு மற்றும் இடஒதுக்கீட்டு வரம்பிற்குள் வராது.

திமுக, அதிமுக பதில் சொல்ல வேண்டும்

பெரம்பலூரை சேர்ந்த 2 தனியார் மருத்துவ கல்லூரிகள் தமிழ்நாடு அரசை அணுகாமலேயே நிகர்நிலை பல்கலைக்கழகங்களாகியுள்ளன. நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் மாணவர் சேர்க்கை நடத்த முடியும்.

சமூக நீதியை பேசும் கட்சிகளை சேர்ந்தவர்கள் நடத்தும் கல்லூரிகள் தான் இடஒதுக்கீட்டிற்கு எதிராக செயல்படுகின்றனர். சமூக நீதியை பேசும் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் பதில் சொல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.