பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் எத்தனை டாஸ்மாக் கடைகள், மனமகிழ் மன்றங்கள் உள்ளன என்ற விவரங்களை அரசு தரப்பில் அறிக்கையாக தாக்கல் செய்ய ஐகோர்ட்டு மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு அண்மையில் பிறப்பித்த உத்தரவில், தமிழகத்தில் 2020-21-ல் எத்தனை டாஸ்மாக் கடைகள், மனமகிழ் மன்றங்கள் இருந்தன. கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 வரை எத்தனை டாஸ்மாக் கடைகள், மனமகிழ் மன்றங்கள் உள்ளன என்ற விவரத்தை மாநில உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை செயலர் இம்மாதம் 16-ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
2025-2026-ம் நிதி ஆண்டில் தமிழ்நாட்டில் சுமார் 4,800 அரசு மதுபானக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இக்கடைகள் தினமும் மதியம் 12 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை இயங்கி வருகிறது. தினமும் சுமார் ரூ.100 கோடி அளவுக்கு மது விற்பனையாகிறது. வார விடுமுறை மற்றும் பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற விடுமுறை தினங்களில் இந்த விற்பனை இரட்டிப்பாகும்.
நீதிபதிகள் இவ்வழக்கில், கூடுதலாக மதுக்கடைகள் வேண்டாம் என கிராம சபை தீர்மானம் நிறைவேற்றிய பின்பும், அதை செயல்படுத்தாமல் தொடர்ந்து எத்தனை மதுக்கடைகள் இயங்குகிறது என்ற விவரமும், மதுக்கடைகளை நடத்துவதற்காக மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள நெடுஞ்சாலைகளாக மாற்றி பள்ளி, கோயில்களுக்கு அருகில் விதியை மீறி எத்தனை மதுக்கடைகள் நடத்தப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் கூடுதலாக உத்தரவிட்டு, அந்த விவரங்களை பெற்று அதன் பின் இந்த விவகாரத்தில் உரிய உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.