சென்னை,
ஆசிரியர்கள் மட்டும் மாணவர்களை முன்னேற்ற முடியாது. பெற்றோரின் ஒத்துழைப்பும் அவசியம். அதற்கு ஊன்றுகோலாய் கொண்டு வரப்பட்டதுதான் பள்ளி மேலாண்மைக்குழு. இந்த குழுவில் 75 சதவீதம் பெற்றோரே இடம்பெற்றிருப்பார்கள். இந்தக் குழு மாதந்தோறும் கூடுவதால், மாணவர்களின் கற்றல் நிலை பற்றி ஆசிரியர்களுடன் பெற்றோர் விவாதிக்க முடியும்.
பள்ளியின் வளர்ச்சிக்கு அரசாங்கத்தை மட்டுமே எதிர்பார்க்காமல், ஊர் மக்களிடமிருந்து நன்கொடை திரட்டுவது அல்லது தன்னார்வலர்களைக் கொண்டு சிறப்பு வகுப்புகள் நடத்துவது போன்ற பணிகளை இக்குழு முன்னெடுக்கும்.
அந்த வகையில் பள்ளி மேலாண்மைக்குழுவுக்கான புதிய மற்றும் ஒருங்கிணைந்த வழிகாட்டுதல்களை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, தேசிய கல்விக்கொள்கை-2020 இலக்குகளை அடையும் நோக்கில் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்றும், 100 மாணவர்கள் வரை உள்ள பள்ளியில் 12 முதல் 15 உறுப்பினர்களும், 100 முதல் 500 வரை மாணவர்கள் இருந்தால் அங்கு 15 முதல் 20 உறுப்பினர்களும், 500-க்கு மேல் மாணவர்கள் இருந்தால் அங்கு 20 முதல் 25 உறுப்பினர்களும் இருக்கும் வகையில் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், குழுவில் 75 சதவீதம் உறுப்பினர்கள் கட்டாயம் பெற்றோராக இருக்கவேண்டும் எனவும், மீதமுள்ள 25 சதவீதம் பேரில் ஆசிரியர்கள், உள்ளூர் பிரதிநிதிகள், கல்வியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் இடம்பெறலாம் எனவும் கூறப்பட்டிருக்கிறது.
இந்த குழுவில் கல்விக்குழு, பள்ளிக்கட்டிடக் குழு என 2 துணைக்குழுக்களையும் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.