புதுடெல்லி
தமிழ்நாட்டுக்கு 9 ஆண்டுகளில் கிடைத்த ஜி.எஸ்.டி. வசூல் எவ்வளவு? என்ற விவரம் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி. அறிமுகம் செய்யப்பட்டு 9 ஆண்டுகள் முடிந்துள்ளன. நாளை, ஜி.எஸ்.டி. 10-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதுவரை ரூ.144.6 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூல் செய்யப்பட்டுள்ளது.
இதில், கடந்த 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ரூ.8,55,389 கோடி ஜி.எஸ்.டி. வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொகை முழுவதும் தமிழக அரசுக்கு கிடைத்து விடாது. ஜி.எஸ்.டி. வரி இரண்டு முக்கிய பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. மாநிலத்திற்குள் நடைபெறும் விற்பனைக்கு விதிக்கப்படும் வரி, மத்திய சி.ஜி.எஸ்.டி. மற்றும் மாநில எஸ்.ஜி.எஸ்.டி. என சமமாக பிரிக்கப்படுகிறது. இதில் எஸ்.ஜி.எஸ்.டி. பகுதி தமிழக அரசுக்கும், சி.ஜி.எஸ்.டி. பகுதி மத்திய அரசுக்கும் செல்கிறது.
உதாரணமாக ரூ.100 ஜி.எஸ்.டி. வசூலானால், சுமார் ரூ.50 மாநில அரசுக்கும், ரூ.50 மத்திய அரசுக்கும் செல்லும். மாநிலங்களுக்கு இடையிலான வர்த்தகத்திற்கு விதிக்கப்படும் ஐ.ஜி.எஸ்.டி. முதலில் மத்திய அரசால் வசூலிக்கப்பட்டு, பின்னர் நிர்ணயிக்கப்பட்ட விதிகளின்படி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
இந்த அடிப்படையில் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் வசூலான ரூ.8,55,389 கோடியில் சுமார் பாதி அளவான ரூ.4.25 லட்சம் கோடி (எஸ்.ஜி.எஸ்.டி) வருவாயாக தமிழக அரசுக்கு கிடைத்திருக்கும். இதனுடன் ஐ.ஜி.எஸ்.டி பங்கீட்டின் மூலம் கிடைத்த தொகையையும் சேர்த்தால், தமிழக அரசுக்கு கிடைத்த மொத்த ஜி.எஸ்.டி. வருவாய் இதைவிட கூடுதலாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதே கணக்கீட்டின் அடிப்படையில்தான் மற்ற மாநிலங்களுக்கும் வருவாய் கிடைக்கும்.