தமிழக செய்திகள்

சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் எங்கு எவ்வளவு மழை பெய்துள்ளது?

மேகவெடிப்பின் காரணமாக சென்னையில் கனமழை கொட்டித்தீர்த்ததாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அதிக கனமழை

வடகிழக்கு பருவமழை, தமிழ்நாட்டில் தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. அதிலும் கடந்த 2 தினங்களாக தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மழை பொழிகிறது. இவ்வளவு நாள் வாட்டி வதைத்த வெயிலுக்கு இதமாக இந்த மழை இருந்து வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் நேற்று முன்தினம் மாலையில் பல இடங்களில் மழை கொட்டியது. அதன்தொடர்ச்சியாக நேற்று பகலில் வெயில் சுட்டெரித்தாலும், நேற்று முன்தினம் போலவே மாலையில் கருமேகங்கள் சூழ தொடங்கி மழை கொட்டத்தொடங்கியது. எப்போதும் போல பெய்யாமல் குறிப்பாக வடசென்னை பகுதிகளில் அதிக கனமழை பெய்தது.

மேகவெடிப்பு

மேகவெடிப்பின் காரணமாக சென்னையில் கனமழை கொட்டித்தீர்த்ததாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தன்னுடைய 'எக்ஸ்' தள பக்கத்தில் சுட்டிக்காட்டியிருந்தார். சுமார் 20 முதல் 30 சதுர மீட்டர் பரப்பளவுக்குள், ஒரு மணி நேரத் தில் 10 சென்டி மீட்டருக்கும் அதிகமாக மழை பொழிந்தால் அதை மேக வெடிப்பினால் ஏற்படும் மழை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.

அந்த வகையில் வடசென்னைக்கு உட்பட்ட கார்கில் நகரில் 10.9 செ.மீட்டரும், மற்றும் திருவள்ளூர் மாவட்டம் மெப்பேடு பகுதியில் 10 செ.மீ. மழையும் கொட்டியது. இதனால் இந்த பகுதிகளில் எல்லாம் மழைநீர் ஆறுபோல ஓடியது. சில தெருக்களில், தாழ்வான பகுதிகளில் குளம் போல மழைநீர் தேங்கியதை பார்க்க முடிந்தது.

போக்குவரத்து சீராக...

இந்த நிலையில், சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் பாரிமுனையில் 36 செ.மீ., கத்திவாக்கத்தில் 34.4 செ.மீ., மீனம்பாக்கத்தில் 29 செ.மீ., சென்னை சென்ட்ரலில் 27 செ.மீ., சாத்தாங்காட்டில் 26 செ.மீ, திருவொற்றியூரில் 22 செ.மீ., எண்ணூரில் 21 செ.மீ., கார்கில் நகர் 19 செ.மீ., சைதாப்பேட்டை 17 செ.மீ., வடபழனி 16 செ.மீ., நுங்கம்பாக்கம் 15 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

சென்னையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி அனைத்து சுரங்க பாதைகளிலும், போக்குவரத்து சீராக உள்ளது. திருவொற்றியூர், சந்தோஷபுரம் உள்ளிட்ட 10 இடங்களில் விழுந்த மரங்களை தீயணைப்புப் படையினர் அப்புறப்படுத்தினர். தியாகராய நகர் உள்பட 4 இடங்களில் மழையால் சாலையோர மின் இணைப்பு பெட்டிகளில் மின் கசிவு காரணமாக சிறிய தீ விபத்தும் உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மீட்பு குழு

சென்னையில் நள்ளிரவில் வரை கொட்டித்தீர்த்த கனமழையால், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை முகாமில் (NDRF) இருந்து ஒரு குழுவினர் சென்னை வந்துள்ளனர். மாநில பேரிடர் மீட்பு படையினருடன் இணைந்து, தாழ்வான பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்வது குறித்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினருடன் அமைச்சர், மாநகராட்சி ஆணையர் ஆலோசனை நடத்தினார்.

கனமழையை தொடர்ந்து “பொதுமக்கள், தங்கள் குடியிருப்புகளுக்கு அருகில் மழைநீர் தேங்கினாலோ, பிற உதவி தேவைப்பட்டாலோ 1913 என்ற அவசர எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT