கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

உயர் கல்வியில் சேர 'கட் ஆப்' மதிப்பெண்ணை கணக்கிடுவது எப்படி?

எல்லா படிப்புகளுக்கும் 200-க்கு 'கட் ஆப்' மதிப்பெண் கணக்கிடப்படுகிறது.

சென்னை,

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளன. இதில், வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் அடுத்து உயர்கல்வி படிப்புக்கு செல்ல வேண்டும். உயர்கல்வியில், என்ஜினீயரிங், வேளாண்மை, கால்நடை மருத்துவம் மற்றும் மீன்வளப் படிப்புகளுக்கு 'கட் ஆப்' மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும். அந்த வகையில், எந்தெந்த படிப்புகளுக்கு எவ்வாறு 'கட் ஆப்' மதிப்பெண் கணக்கிடப்படுகிறது என்பதை தொடர்ந்து பார்ப்போம். எல்லா படிப்புகளுக்கும் 200-க்கு 'கட் ஆப்' மதிப்பெண் கணக்கிடப்படுகிறது.

என்ஜினீயரிங் படிப்புகள் (பி.இ., பி.டெக்)

என்ஜினீயரிங் படிப்புக்கு 'கட் ஆப்' மதிப்பெண் கணக்கிடும்போது, கணித மதிப்பெண் 100-க்கு எவ்வளவு என்பது முழுமையாகவும், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்தில் எடுத்த மதிப்பெண்கள் பாதியாகவும் கணக்கிட்டு, மூன்றையும் கூட்டவேண்டும்.

வேளாண்மைப் படிப்புகள் (தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் - பி.எஸ்.சி. வேளாண்மை)

வேளாண்மை படிப்புக்கு 'கட் ஆப்' கணக்கிடும்போது, உயிரியல் பாடத்தில் எடுத்த மதிப்பெண்ணில் பாதி அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடத்தில் எடுத்த மதிப்பெண்களை கூட்டி, அதில் பாதியை கணக்கிட வேண்டும். மேலும், அந்த மதிப்பெண்ணுடன் கணித மதிப்பெண்ணில் பாதி, இயற்பியல் மதிப்பெண்ணில் கால் பங்கு, வேதியியல் மதிப்பெண்ணில் கால் பங்கு ஆகியவற்றை சேர்த்து கூட்ட வேண்டும்.

கால்நடை மருத்துவப் படிப்பு (தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் - பி.வி.எஸ்.சி., ஏ.எச்.)

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு 'கட் ஆப்' மதிப்பெண் கணக்கிடும்போது, உயிரியல் பாடத்தில் முழு மதிப்பெண்ணையும், இயற்பியல் மற்றும் வேதியியலில் எடுத்த மதிப்பெண்களில் பாதியையும் சேர்த்து கூட்ட வேண்டும்.

மீள்வளப் படிப்பு (தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் - பி.எப்.எஸ்.சி.)

மீன்வளப் படிப்புக்கு 'கட் ஆப்' கணக்கிடும்போது, உயிரியல் மதிப்பெண்ணை 100-க்கும், இயற்பியல் மற்றும் வேதியியல் மதிப்பெண்களை 50-க்கும் கணக்கிட்டு, 3 மதிப்பெண்களையும் கூட்ட வேண்டும்.