திருப்பூர்,
தேசிய மின்சார பாதுகாப்பு வாரமாக நேற்று முதல் வருகிற 2-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மின் பாதுகாப்பு வழிமுறைகளை திருப்பூர் மாவட்ட மின் ஆய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மின் ஆய்வுத்துறை மின் ஆய்வாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற தரமான வயர்கள் மற்றும் மின்சார சாதனங்களை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். மின்சார பிளக்குகளை பொருத்துவதற்கு முன்பும், எடுப்பதற்கு முன்பும் சுவிட்சை அனைத்து விடுவது அவசியம். குளிர்சாதன பெட்டி, கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு நில இணைப்புடன் கூடிய மூன்று பின் சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலமாக மட்டும் மின் இணைப்பு கொடுக்க வேண்டும்.
30 மில்லி ஆம்ப்ஸ் ஆர்.சி.சி.பி. அல்லது ஆர்.சி.பி.ஓ. மின்கசிவு தடுப்பாணை இல்லங்களில் உள்ள மெயின் சுவிட்ச் போர்டில் பொருத்தி மின்கசிவால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கலாம். உடைந்த சுவிட்சுகளையும், பிளக்குகளையும் உடனே மாற்றிவிடுங்கள். பழுதான மின்சாதனங்களை உபயோகிக்கக்கூடாது. கேபிள் டி.வி. வயர்களை மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லக்கூடாது.
ஒவ்வொரு வீட்டுக்கும் சரியான நில இணைப்பு போடுவதுடன் அதை குழந்தைகள் மற்றும் விலங்குகள் தொடாத வகையில் மூடியுடன் கூடிய எர்த்தொட்டி அமைத்து சரியாக பராமரிக்க வேண்டும். சுவிட்சுகள், பிளக்குகள் போன்றவை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உங்கள் வீட்டின் வயரிங்குகளை சோதனை செய்து தேவைப்பட்டால் மாற்றிக்கொள்ளலாம்.
மின் கம்பத்துக்கான 'ஸ்டே' வயர் மீது கொடி கயிறு கட்டி துணி காயபோடக்கூடாது. குளியலறை, கழிப்பறை மற்றும் ஈரமான இடங்களில் சுவிட்சுகளை பொருத்தக்கூடாது. சுவற்றின் உள்பகுதியில் மின்சார கம்பியை குழாய் மூலம் கொண்டு சென்ற இடத்தில் ஆணி அடிக்கக்கூடாது. மழைக்காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்பகிர்வு பெட்டிகளின் ஸ்டே வயர்கள் மற்றும் எர்த்பிட் ஆகியவற்றின் அருகே செல்லக்கூடாது. மின்கம்பி அறுந்து கிடந்தால் அதன் அருகே செல்லக் கூடாது. உடனடியாக மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின்கம்பி அருகே செல்லும் மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்வாரிய அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும். அவசர நேரங்களில் மின் இணைப்பை துண்டிக்கும் வகையில் மின்கருவிகளின் சுவிட்சுகளை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.