சென்னை,
த.வெ.க. தலைவர் விஜய்யை, நேற்று முன்தினம் தலைமை செயலாளர் சாய்குமார் மற்றும் போலீஸ் டி.ஜி.பி. சந்தீப்ராய் ரத்தோர் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளதாக தெரிகிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் விஜய்க்கு முதல்-அமைச்சருக்குரிய பாதுகாப்பு மற்றும் கான்வாய்கள் வழங்கப்பட்டன. அவர் ஆட்சி அமைக்க கவர்னரை சந்திக்க சென்றபோது கூட முதல்-அமைச்சருக்குரிய பாதுகாப்பு நடைமுறைகள் இருந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் அந்த பாதுகாப்பும், கான்வாயும் விஜய்யி டம் இருந்து திரும்பபெறப்பட்டன. அதேபோல் நேற்று காலை முதல் விஜய் வீட்டில் இருந்த பாதுகாப்பு வளையமும் விலக்கி கொள்ளப்பட்டன. ஆனால் விஜய் கேட்டு கொண்டதால்தான் பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டது என்று த.வெ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கவர்னர் அர்லேகர், தலைமை செயலாளர் சாய்குமார் மற்றும் டிஜிபி.யிடம் சில கேள்விகளை எழுப்பி உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
அதாவது ஒரு தேர்தல் முடிந்து, மெஜாரிட்டி இல்லாத சூழ்நிலையில் சட்டப்படி நீங்கள் முதலில் என்னை (கவர்னர்) சந்தித்து ஆலோசித்த பிறகே எந்த முடிவுக்கும் வந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு முன்னதாக நீங்கள் எப்படி அவரை (விஜய்) சந்தித்தீர்கள். அதோடு அவருக்கு எப்படி முதல்-அமைச்சருக்கான வசதிகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்தீர்கள் என்று கவர்னர் கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும், சென்னை மெரினாவில் விஜய்யை ஆட்சியமைக்க அழைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் போராட்டம் நடத்தப்போவதாக வரும் தகவல்கள் குறித்தும் கவர்னர் அறிவுறுத்தி, புதிய ஆட்சி பொறுப்பேற்கும் வரை தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை அமைதியான முறையில் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.