சென்னை,
கர்ப்பப்பை வாய் புற்றுநோயினை தடுப்பதற்காக, 14 முதல் 15 வயதிற்குட்பட்ட சென்னை பள்ளி மாணவிகளுக்கு ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு முழுவதும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயினை தடுப்பதற்காக, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாயிலாக 14 வயது தொடங்கி 15 வயது பூர்த்தியடைவதற்கு முன்னதாக மாணவிகளுக்கு இலவசமாக ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் 14 வயது முதல் 15 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசி செலுத்தும் பணியானது, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஒப்புதலுடன் நடைபெற்று வருகிறது. சிறுமியருக்கு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய புற்றுநோய் அபாயத்தைத் தடுப்பதற்கு இது உதவுகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் 71 சென்னை பள்ளிகளில் பயிலும் 14 முதல் 15 வயதிற்குட்பட்ட 3,701 மாணவிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-71க்குட்பட்ட பாரதி சாலையில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தில், எம்.எச்.சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 14 முதல் 15 வயதிற்குட்பட்ட 350 மாணவியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை இணை ஆணையாளர் (கல்வி) க. கற்பகம், இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் மாநகர மருத்துவ அலுவலர், கல்வி அலுவலர்கள், கூடுதல் மாநகர மருத்துவ அலுவலர், மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.