தமிழக செய்திகள்

சென்னையில் ஒரே நாளில் நூற்றுக்கணக்கான ஆட்டோக்களுக்கு அபராதம்

ஒரே நாளில் நூற்றுக்கணக்கான ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,

தலைநகர் சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக நூற்றுக்கணக்கான ஆட்டோக்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர். சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தீவிர வாகன சோதனையின்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையின் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை நடத்திய போலீசார், விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட ஆட்டோக்களுக்கு அபராதம் விதித்தனர். சீருடை அணியாமல் ஆட்டோக்களை ஓட்டியவர்களுக்கு ரூ.500 முதல் ரூ.1,500 வரை அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல், பக்கவாட்டுக் கண்ணாடிகளை ஆட்டோவின் உள்ளே வைத்து இயக்கியவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. அனுமதிக்கப்பட்ட அளவைவிட இருக்கைகள் அதிக அகலமாக இருந்த ஆட்டோக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், அதிக கட்டணம் வசூலித்தல், முறையான ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களை இயக்குதல், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களுக்காகவும் அபராதம் விதிக்கப்பட்டது.கே.கே. நகர், சோழிங்கநல்லூர், பெரம்பூர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. ஒரே நாளில் நூற்றுக்கணக்கான ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT