தமிழக செய்திகள்

பிரிந்து வாழ்ந்த மனைவியை கடத்திய கணவர்... பெரம்பலூரில் பரபரப்பு

செல்வ ராணியை காரில் கடத்திச் செல்லும் வீடியோவை அவரது மகள் கீர்த்தனா சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், டி களத்தூர் அருகில் உள்ள தேனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி செல்வராணி. இவர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். பெருமாள் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த பெருமாள், இனி குடும்பத்துடன் வாழலாம் என்று ஊர் திரும்பினார். ஊருக்கு வந்தபின்னர் கணவன்- மனைவி இடையே மீண்டும் கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டது. இதனால் செல்வ ராணி கோபித்துக்கொண்டு தனது இளைய மகள் கீர்த்தனாவுடன் பெரம்பலூரில் ஒரு வீடு வாடகை எடுத்து தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு பெரம்பலூர் நான்கு ரோடு சாலையில் உள்ள கோல்டன் சிட்டியில் வேளாண்மை துறை விதை அலுவலர் கலிய பெருமாள் வீட்டில் வசித்து வந்த செல்வ ராணியை இரண்டு பேர் கொண்ட கும்பல் வலுக்கட்டாயமாக தரதரவென இழுத்து காரில் கடத்திச் செல்லும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் கீர்த்தனா.

மேலும் தனது தாயின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தன் தந்தை மற்றும் அவரது நண்பர் இளவரசன் உட்பட நான்கு பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றுவிட்டதாகவும், அவரை உயிருடன் மீட்டு தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த பதிவை பார்த்த பெரம்பலூர் போலீசார், கீர்த்தனாவை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து புகார் பெற்று, அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து கடத்தல் கும்பலையும் செல்வராணியையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.