தமிழக செய்திகள்

பிரபல ரவுடி கொலையில் கணவன்-மனைவி கைது: விசாரணையில் திடுக்கிடும் தகவல்

குளத்தை குத்தகைக்கு எடுத்த விவகாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

கூடங்குளம்,

கூடங்குளம் அருகே பிரபல ரவுடி கொலை வழக்கில் கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர்.

ரவுடி வெட்டிக்கொலை

குமரி மாவட்டம் தாமரைக்குளத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் செல்வம் (வயது 46). பிரபல ரவுடியான இவர் மீது குமரி, தூத்துக்குடி தாளமுத்துநகர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

செல்வத்துக்கு சொந்தமான தோட்டம், நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே சங்கனேரி கிராமத்தில் உள்ளது. இவர் சம்பவத்தன்று தனது தோட்டத்துக்கு சென்றபோது, மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள், கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சிக்கிய தம்பதி

மேலும் இன்ஸ்பெக்டர் நவீன் உத்தரவின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் வினோத் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் குற்றவாளிகள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் செல்வத்தின் கூட்டாளிகளான பொட்டல்குளத்தை சேர்ந்த சந்துரு (26), அவரது மனைவி கவுரி ஆகியோர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

திடுக்கிடும் தகவல்

இதையடுத்து போலீசார் 2 பேரையும் நேற்று முன்தினம் இரவில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது, செல்வம், சந்துரு சேர்ந்து குளத்தை குத்தகைக்கு எடுத்து அதில் தாமரை பூக்களை வளர்த்து விற்பனை செய்தனர்.

சமீபத்தில் ஒரு குளத்தை குத்தகைக்கு எடுத்த விவகாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக செல்வத்தை 2 பேரும் சேர்ந்து கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

அதிரடி கைது

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து சந்துரு, கவுரி ஆகிேயைார அதிரடி யாக கைது செய்தனர்.