போரூர்,
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவரது மனைவி விஜயா (வயது 50) இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள வீட்டு வேலைகளுக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனம் நடத்தி வரும் அனந்த பத்மநாபர் என்பவர் மூலம் மாடப்பாக்கம் பகுதியில் உள்ள பெண் ஒருவரது வீட்டில் வேலைக்கு சென்றார்.
வேலைக்கு சேர்ந்த ஒரே வாரத்தில் விஜய 35 சவரன் நகைகளை சுருட்டி கொண்டு தலைமறைவானார். இது தொடர்பாக சேலையூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான விஜயாவை தொடர்ந்து தேடி வந்தனர்.
இந்தநிலையில், கடந்த 29-ம் தேதி மேல்மருத்தூரில் பதுங்கி இருந்த விஜயா மற்றும் அவரது கணவர் பன்னீர் செல்வம் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் பிடித்து விசாரணைக்காக சேலையூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
கடந்த 2 நாட்களாக நடத்திய விசாரணைக்கு பின்னர் நேற்று முன் தினம் தம்பதி இருவரையும் வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி வரும் அனந்த பத்மநாபனிடம் உங்களது பாதுகாப்பில் தங்க வைத்துக்கொள்ளுங்கள் என்று அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து விஜயா மற்றும் அவரது கணவர் பன்னீர் செல்வம் ஆகிய இருவரையும் மேற்கு மாம்பலத்தில் உள்ள தனி அறையில் அனந்த பத்மநாபன் தங்க வைத்தார்.
நேற்று நள்ளிரவில் கணவன் - மனைவி இடையே திடீரென கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த விஜயாவும், பன்னீர் செல்வமும் கத்தியால் ஒருவரையொருவர் சரமாரியாக குத்திக்கொண்டனர்.
மேலும் பன்னீர் செல்வம் கத்தியால் மனைவி விஜயாவை சரமாறியாக வெட்டினார். இதில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்ட விஜய ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். பன்னீர் செல்வம் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார்.
அலறல் சத்தம் கேட்டு வந்த அனந்த பத்மநாபன் அறைக்கு வந்து பார்த்து போது விஜயா கொலை செய்யப்பட்டு கிடப்பதையும் அவரது கணவர் பன்னீர் செல்வம் கத்தி குத்து காயத்துடன் கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அசோக்நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உயிருக்கு போராடிய பன்னீர் செல்வத்தை மீட்டு ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விஜயாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திர்க்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நகை திருட்டு வழக்கு சம்பந்தமாக விஜயாவையும் அவரது கணவர் பன்னீர் செல்வத்தையும் விசாரித்து போலீசார் திருப்பி அனுப்பி இருந்தனர். இன்று காலை அவர்களை மீண்டும் விசாரணைக்காக போலீசார் அழைத்து இருந்ததாக தெரிகிறது.
நகை திருட்டு வழக்கில் சிக்கியதால் கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் அவர்கள் ஒருவரையொருவர் மாறி, மாறி கத்தியால் குத்திக்கொண்டதும், ஆத்திரத்தில் பன்னீர் செல்வம் கத்தியால் மனைவி விஜயாவை வெட்டி கொன்று இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
நகை திருடிய வழக்கில் விசாரணை கைதியான விஜயா மற்றும் அவரது கணவர் பன்னீர் செல்வத்தை விசாரணைக்கு பின்னர் போலீசார் அனந்த பத்மநாபனிடம் ஒப்படைத்தது ஏன்? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.