தமிழக செய்திகள்

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2.75 லட்சம் மோசடி: கணவன், மனைவிக்கு 2 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியை சேர்ந்த கணவன், மனைவி ஆகிய 2 பேரும், அந்த பகுதியை சேர்ந்த 2 பேரிடம் அரசாங்க வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.2.75 லட்சம் பணத்தை மோசடி செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன்(எ) வானவில் பாலா (வயது 36) மற்றும் அவரது மனைவி ஆகியோர் சேர்ந்து கடந்த 2024-ம் ஆண்டு ஏரல் பகுதியைச் சேர்ந்த 2 பேரிடம் அரசாங்க வேலை வாங்கித் தருவதாக கூறி மொத்தம் ரூ.2.75 லட்சம் பணத்தை மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு 1-ல் மோசடி வழக்கு பதிவு செய்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-IV ல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியராஜ் நேற்று, மேற்சொன்ன குற்றவாளிகளான பாலமுருகன்(எ) வானவில் பாலா மற்றும் அவரது மனைவி ஆகிய 2 பேரை குற்றவாளிகள் என உறுதி செய்து, மோசடி குற்றத்திற்காக தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த மாவட்ட குற்றப்பிரிவு-I போலீஸ் டி.எஸ்.பி. மயில்சாமி, இந்த வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த மாவட்ட குற்றப்பிரிவு-I போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி, அப்போதைய சப்-இன்ஸ்பெக்டர் அனிதா, நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் கண்ணன், வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த ஏட்டு வைரமணி ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் பாராட்டினார்.