ஈரோடு,
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொளப்பலூரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 42). அவருடைய மனைவி மஞ்சுளா (39). இவர்கள் கொளப்பலூரில் இருந்து சிறுவலூர் செல்லும் வழியில் மூப்பன்சாலை என்ற இடத்தில் கடந்த 3 மாதங்களாக பன்றி இறைச்சிக்கடை வைத்து நடத்தி வந்தனர்.
வழக்கம்போல் நேற்று 2 பேரும் கடையில் வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தனர். இந்தநிலையில் மாலை 5 மணி அளவில் கொளப்பலூரில் திடீரென இடி-மின்னலுடன் மழை பெய்தது. அப்போது திடீரென சுரேசையும், மஞ்சுளாவையும் மின்னல் தாக்கியது. இதனால் 2 பேரும் சுயநினைவின்றி கீழே விழுந்தனர்.
உயிரிழந்தனர்.
இதைப்பார்த்த அருகே நின்றிருந்த சுரேசின் அண்ணன் பிரபு அதிர்ச்சி அடைந்து பதறி துடித்தார். உடனே சிறுவலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இருவரும் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்னல் தாக்கி உயிரிழந்த சுரேஷ், மஞ்சுளாவுக்கு பிரியா (18) என்ற மகளும், கதிரேசன் (16) என்ற மகனும் உள்ளனர். மின்னல் தாக்கி கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.