விபத்துக்குள்ளான பைக் 
தமிழக செய்திகள்

படாளம் அருகே லாரி மோதி கணவன்-மனைவி உயிரிழப்பு

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 3 வயது குழந்தை தூக்கி வீசப்பட்டு லேசான காயங்களுடன் உயிர் தப்பியது.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அருகே உள்ள மெய்யூர் சந்திப்பில் இன்று காலை நிகழ்ந்த கோரச் சாலை விபத்தில், 3 வயது குழந்தையின் கண்முன்னே தாய் மற்றும் தந்தை லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

குடும்பத்துடன் பைக்கில் பயணம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா முனுங்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு (வயது 41). இவரது மனைவி கவிதா என்ற பச்சையம்மாள் (வயது 38). இத்தம்பதியினர் இன்று (புதன்கிழமை) காலை தங்களது 3 வயது ஆண் குழந்தையுடன் பைக்கில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

லாரி மோதி கோர விபத்து

செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அடுத்த மெய்யூர் சந்திப்பு பகுதியில் இவர்களது வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது, பின்னால் எம்.சாண்ட் மணல் ஏற்றி வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக பைக்கின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

சக்கரத்தில் சிக்கி பெற்றோர் பலி

இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த வேலு மற்றும் பச்சையம்மாள் ஆகிய இருவரும் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக 3 வயது குழந்தை தூக்கி வீசப்பட்டு லேசான காயங்களுடன் உயிர் தப்பியது. தனது கண்முன்னே பெற்றோரை இழந்த அக்குழந்தை கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

போலீசார் விசாரணை

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த படாளம் போலீசார், உயிரிழந்த தம்பதியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த துயரச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT