தமிழக செய்திகள்

ரோட்டிலேயே உல்லாசத்திற்கு அழைப்பு; கோவையில் வடமாநில பெண்கொலையில் கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்

ஆண் நண்பர்களுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் நிர்வாண வீடியோக்கள் அனுப்பி உள்ளார் பர்ஷா.

கோவை,

இளம்பெண்ணை கொன்று உடலை காட்டுக்குள் வீசிவிட்டு தலைமறைவான கணவர் கைதானார். இன்ஸ்டாகிராமில் பலருடன் பழகியதால் தீர்த்து கட்டிய தாக வாக்குமூலம் அளித்து உள்ளார்.

நிர்வாண நிலையில் இளம்பெண் பிணம்

கோவை-பாலக்காடு ரோட்டில் மேற்கு புறவழிச்சாலை பிரியும் இடத்தில் மஞ்சப்பள்ளம் என்ற காட்டுப்பகுதியில் 25 வயதான இளம்பெண் நிர்வாண கோலத்தில் பிணமாக கிடந்தார். மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த பெண் மூச்சுத் திணறடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த பெண்ணின் பெயர் பர்ஷா (வயது 25), ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. கொலை செய்தவர் யார் என்று அடையாளம் தெரியாமல் இருந்தது.

இந்த நிலையில் பர்ஷாவின் கையில் பச்சை குத்தப்பட்டு இருந்தது. இந்த ஒரு தடயத்தை வைத்து மட்டும் போலீசார் துப்பு துலக்கினார்கள். மேலும் 60 ஆயிரத்துக்கும் மேலான செல்போன்களும் ஆய்வு செய்யப்பட்டது. விசாரணையில் ஜெகன் பிரதான் என்பவர் பர்ஷாவை காதலித்து திருமணம் செய்துள்ளார். கோவையில் தங்கி இருந்து கட்டுமான வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு மனைவியை கொன்றுவிட்டு தலைமறைவாகிவிட்டார். மேலும் அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

ஒடிசாவில் திருமணம்

ஜெகன் பிரதான் பயன்படுத்திய செல்போன் நம்பரை வைத்து ஆய்வு செய்தபோது, அவர் வடமாநிலத்தில் பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தனிப்படை போலீசார் ஆந்திராவுக்கு சென்று ஜெகன் பிரதானை (வயது 23) கைது செய்தனர். அவர் போலீசில் வாக்குமூலம் அளித்து உள்ளார். அது குறித்து போலீசார் கூறியதாவது:-

கடந்த 2023-ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் இருவரும் காதலித்து ஒடிசாவில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகும் கட்டுமான தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். கோவை வந்து பல்வேறு இடங்களில் கட்டுமான வேலையில் ஈடுபட்டு வந்து உள்ளனர்.

இன்ஸ்டகிராம் பழக்கம்

அப்போது பர்ஷா இன்ஸ்டாகிராமில் பல ஆண் நண்பர்களுடன் தொடர்பில் இருந்ததை அறிந்து ஜெகன்பிரதான் அவரை கண்டித்துள்ளார். ஆண் நண்பர்களுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் நிர்வாண வீடியோக்கள் அனுப்பி உள்ளார். மேலும் வீடியோ காலில் ஒட்டு துணி இல்லாமல் நிர்வாணமாக பேசி வந்துள்ளார். இதனை அவர் கண்டித்ததால் பர்ஷாவுக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அவர் செல்போன் பயன்படுத்துவதையும் தடுத்தார். இந்த நிலையில் வேலை பார்க்கும் சக தொழிலாளர்களின் செல்போன்களை வாங்கி பர்ஷா, இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வந்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

உல்லாசத்திற்கு அழைப்பு

சம்பவத்தன்று வேலை தேடி மஞ்சப்பள்ளம் என்ற இடத்தில் ரோட்டில் நடந்து சென்ற போது பர்ஷாவை உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார். ரோட்டிலேயே உல்லாசத்திற்கு அழைக்கிறாயா? என அவர் மறுத்துவிட்டார். உன் நண்பர்களுக்கு மட்டும் நிர்வாணமாக வீடியோ காலில் பேசுவாயா? என்னிடம் உல்லாசமாக இருக்கமாட்டாயா என இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த அவர் பர்ஷாவின் கழுத்தை நெரித்து கொலை செய்து உள்ளார். பின்னர் அவரை அடையாளம் தெரியாமல் இருக்க ஆடைகளை அகற்றி உடலை முட்புதரில் வீசியுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்ற போது போலீசாரிடம் சிக்கியதாக தெரிய வந்தது. கைதான அவர் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இளம்பெண் கொலையில் துப்பு துலக்கிய பேரூர் துணை சூப்பிரண்டு சுரேஷ், மதுக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் மற்றும் தனிப்படையினரை மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு பவன்குமார் பாராட்டினார்.