தமிழக செய்திகள்

விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கணவர்: காவல் நிலையத்திற்குள் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த பெண்

125 நாள் வேலை கொடுப்பதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அந்த பெண்ணுக்கும், ஊராட்சி எழுத்தருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

கடலூர்,

விசாரணைக்காக கணவரை அழைத்து வந்ததால், அவரை விடுவிக்க கோரி காவல் நிலையத்திற்குள் பெட்ரோல் ஊற்றி பெண் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

125 நாள் வேலை

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஒறையூரை சேர்ந்தவர் லட்சாதிபதி. இவரது மனைவி கண்மணி (வயது 28). இவர் ஒறையூர் ஊராட்சியில் 'விபி-ஜி ராம் ஜி' திட்டத்தின் கீழ் நடந்து வரும் 125 நாள் வேலை வழங்கும் ஊராட்சி திட்டத்தில் பணிதள பொறுப்பாளராக இருந்து வருகிறார். அதே ஊராட்சியில் அதே பகுதியை சேர்ந்த அருள்(53) என்பவர் ஊராட்சி எழுத்தராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில், 125 நாள் வேலை கொடுப்பதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கண்மணிக்கும், ஊராட்சி எழுத்தர் அருளுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இருதரப்பு புகார்

இதில்,கண்மணி தன்னை அருள் தாக்கியதாக புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதேபோன்று அருள், தன்னை கண்மணியும் அவரது கணவர் லட்சாதிபதியும் சேர்ந்து தாக்கியதாக புகார் அளித்தார். மேலும், அருள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகவும் சேர்க்கப்பட்டார்.

இதனிடையே இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில், அவர்களிடம் விசாரணை நடத்த காவல் நிலையத்திற்கு அழைத்திருந்தனர். அந்த வகையில், ஊராட்சி எழுத்தர் அருளை தாக்கியதாக கூறி லட்சாதிபதியை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அங்கு உட் கார வைத்திருந்தனர்.

மனைவி தீக்குளிப்பு

இதுபற்றி அறிந்த கண்மணி, மாலை 4.30 மணியளவில் காவல் நிலையம் வந்தார். அவர் எனது கணவர் எந்த தவறும் செய்யவில்லை அவரை விடுவிக்க வேண்டும் என்று கூறியவாறு, காவல் நிலைய நுழைவு வாயிலில் நுழைந்து, தான் ஒரு கேனில் எடுத்து வந்திருந்த பெட்ரோலை தன் மீது திடீரென ஊற்றிக் கொண்டார்.

இதை சற்றும் எதிர்பாராத போலீசார், அவரை தடுக்க முயன்ற போது, கையில் வைத்திருந்த தீப்பெட்டியால் தீக்குச்சியை உரசி கண்மணி பற்ற வைத்தார். இதில் குபீரென தீ அவரது உடலில் பற்றி எரிந்தது. உடலில் எரிந்த தீயுடன் அவர் நுழைவு வாயிலில் இருந்து காவல் நிலையம் உள்ளே ஓடினார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கிருந்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும் அவர்கள் துரிதமாக செயல்பட்டு கண்மணி மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

தீவிர சிகிச்சை

தொடர்ந்து, அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதனிடையே காவல் நிலையத்திற்குள் பெண் தீக்குளித்த சம்பவத்தால், அங்கு பதற்றம் அதிகரித்தது. இந்த சம்பவத்தை கண்டித்து கண்மணியின் உறவினர்கள் காவல் நிலையம் முன்பு அரசூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

SCROLL FOR NEXT