தமிழக செய்திகள்

மாலியில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட கணவர்: கலெக்டருக்கு மனைவி கண்ணீர் மனு

எனது கணவருடன் மாலிக்கு சென்ற பொன்னுத்துரை, சண்முகம், சரண், வின்சென்ட் ஆகிய 4 பேர் மட்டும் தமிழகம் திரும்பியுள்ளனர் என்று பேச்சிமுத்துவின் மனைவி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா, கலப்பைப்பட்டியைச் சேர்ந்த பேச்சிமுத்து (வயது 43) என்பவரின் மனைவி காளியம்மாள் மாவட்ட கலெக்டருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

"எனது கணவர் பேச்சிமுத்து கடந்த 14.3.2025 அன்று ஆப்பிரிக்காவில் உள்ள மாலி நாட்டிற்கு மின் பணியாளராக வேலைக்குச் சென்றுள்ளார். அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த மேலும் 4 பேர் சென்றுள்ளனர்.

கடந்த 10.11.2025 அன்று பேச்சிமுத்து உட்பட 5 பேரையும் மாலி நாட்டு பயங்கரவாதிகள் கடத்தியதாகத் தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில், அவருடன் சென்ற பொன்னுத்துரை, சண்முகம், சரண், வின்சென்ட் ஆகிய 4 பேர் மட்டும் 15.3.2026 அன்று தமிழகம் திரும்பியுள்ளனர். திரும்பி வந்த நபர்கள், பேச்சிமுத்துவை பயங்கரவாதிகள் கொலை செய்து அங்கேயே அடக்கம் செய்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

ஆனால் இந்தியத் தூதரகம் வழியாக முறையான எந்தத் தகவலும் குடும்பத்தினருக்கு வரவில்லை. எனது கணவரின் பாஸ்போர்ட் மற்றும் விசா மட்டுமே என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் இறந்துவிட்டது உண்மையென்றால் அவரது உடலை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

மேலும் இந்தியத் தூதரகம் மூலம் உரிய இழப்பீடு கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு குழந்தைகளுடன் வாழ்வாதாரமின்றித் தவிக்கும் இந்தக் குடும்பம், மத்திய மற்றும் மாநில அரசுகள் தலையிட்டுத் தங்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும்" என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.