பெங்களூரு,
உத்தர பிரதேச மாநிலம் அசாம்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் மனோஜ் விஸ்வகர்மா. இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு சப்னா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு தனது மனைவியுடன் பெங்களூருவில் குடியேறிய மனோஜ், அங்கு வாடகை வீட்டில் தங்கியிருந்து தச்சு வேலைகள் செய்து வந்தார்.
இந்த நிலையில், மனோஜ் சமீப காலமாக வேலையில் கவனம் செலுத்தாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இன்று காலை 11.30 மணியளவில் மனோஜ் வீட்டில் இருந்து கணவன், மனைவி இருவரும் கடுமையாக வாக்குவாதம் செய்யும் சத்தம் கேட்டுள்ளது. சிறிது நேரம் கழித்து அக்கம்பக்கத்தின் மனோஜின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்து. கதவை தட்டிப் பார்த்தபோது எந்த பதிலும் இல்லை.
இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைந்தனர். அங்கே மனோஜ் தூக்கில் தொடங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது மனைவி சப்னா கீழே விழுந்து கிடந்தார். அவரை சோதித்து பார்த்தபோது அவரும் உயிரிழந்துவிட்டார் என்பது தெரியவந்தது. இருவரது உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், மனோஜின் மனைவி சப்னா 4 மாதங்கள் கர்ப்பிணியாக இருந்தார் என்பது தெரியவந்துள்ளது. மனோஜ் தனது மனைவியின் கழுத்தை நைலான் கயிற்றை வைத்து இறுக்கி கொலை செய்துவிட்டு, பின்னர் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர். கர்ப்பிணியான தனது மனைவியை மனோஜ் ஏன் கொலை செய்தார்? கணவன், மனைவிக்குள் என்ன பிரச்சினை ஏற்பட்டது? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.