தமிழக செய்திகள்

நடத்தையில் சந்தேகம்: கழுத்தை இறுக்கி இளம்பெண் படுகொலை - கணவர் வெறிச்செயல்

மனைவியை கொலை செய்த மணிகண்டன் போலீசில் சரணடைந்தார்.

சேலம்,

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் இளம்பெண்ணை கணவர் கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.

நடத்தையில் சந்தேகம்

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சங்கோதி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (33 வயது), விசைத்தறி தொழிலாளி. இவருடைய மனைவி நந்தினி (28 வயது). இவர்களுக்கு சஞ்சனா (9 வயது), தாரணிகா (6 வயது) ஆகிய 2 மகள்களும், வேல்முருகன் (4 வயது) என்ற மகனும் உள்ளனர். நந்தினி அடிக்கடி செல்போனில் நீண்ட நேரம் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனைவியின் நடத்தை மீது மணிகண்டனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அடிக்கடி தகராறு

இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் மணிகண்டன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவர் மனைவியிடம் உனது நடத்தை சரியில்லை என்று கூறி உள்ளார். இதனால் மீண்டும் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கொலை

இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன், துப்பட்டாவால் மனைவியின் கழுத்தை இறுக்கினார். இதில் நந்தினி மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனிடையே தாய், தந்தை தகராறு சத்தம் கேட்டு தூங்கி கொண்டிருந்த 3 குழந்தைகளும் எழுந்து அங்கு வந்தனர். அப்போது அங்கு தாய் இறந்து கிடந்ததை பார்த்து கதறி அழுதனர்.

அவர்களது அழுகை சத்தம் கேட்டு பக்கத்து அறையில் தூங்கி கொண்டிருந்த மணிகண்டனின் தாயார் ராஜாத்தி மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். நந்தினி கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசில் சரண்

இதற்கிடையில் மனைவியை கொலை செய்த மணிகண்டன் வீட்டை விட்டு வெளியேறி எடப்பாடி போலீஸ் நிலையத்தில் சரணடைந்து நடந்த விவரங்களை தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT