ஈரோடு,
ஈரோடு மாவட்டம் பவானி அருகே, குடும்பத் தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய தனது மனைவியை, கடந்த 22 நாட்களாகக் கணவர் கண்ணீருடன் தேடி வரும் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி பகுதியைச் சேர்ந்த தம்பதியினருக்கு இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த மனைவி, கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால் இதுவரை அவர் வீட்டிற்கு வரவில்லை.
மனைவி காணாமல் போனதைத் தொடர்ந்து, கணவர் தனது உறவினர்கள் வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் தீவிரமாகத் தேடியுள்ளார். ஆனால், 22 நாட்கள் கடந்தும் மனைவியைப் பற்றி எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையில், இவர்களின் மகள் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கணவர், தனது மகளின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, "உடனே வீட்டிற்கு திரும்பி வா" என கண்ணீருடன் உருக்கமான வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
இது குறித்து பவானி காவல் நிலையத்தில் கணவர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள பவானி போலீசார், மாயமான பெண்ணைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், அவதிப்படும் குழந்தையைக் காக்க, அந்த பெண் இருக்கும் இடம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக பவானி போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.