கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன் - மனைவி தற்கொலை... அதிர்ச்சி சம்பவம்

குழந்தை இல்லாததால் கணவன் - மனைவி மிகுந்த மன வேதனையில் இருந்து வந்தனர்.

தஞ்சாவூர்,

குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை இல்லை

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மகிழங்கோட்டை ஊராட்சி கீழக்காடு பகுதியை சேர்ந்தவர் சண்முகநாதன் (51 வயது). இவருடைய மனைவி வித்யா (42 வயது). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. குழந்தை இல்லாததால் இந்த தம்பதி மிகுந்த மன வேதனையில் இருந்து வந்தனர். வித்யா, மகிழங்கோட்டை மேலக்காடு பகுதியில் உள்ள தனது அக்கா வனிதா வீட்டில் வந்து தங்கி இருந்தார்.

தீக்குளித்து தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்ற வித்யா, திடீரென்று தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். தீயின் வேதனை தாங்காமல் அவர் சத்தம்போட்டு அலறினார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து வித்யாவை மீட்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வித்யா இறந்து விட்டதாக கூறினர். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனிடையே வித்யா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதை சண்முகநாதனிடம் தெரிவிப்பதற்காக உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் அவரது போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் இணைப்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் மதுக்கூர் அருகே பத்தாங்காடு கிராமத்தில் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்குவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் சண்முகநாதனின் அண்ணன் பரந்தாமன் அங்கு சென்று பார்த்தபோது அது சண்முகநாதன் என்பது தெரியவந்தது. அவருடைய உடலை மதுக்கூர் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT