ஹைட்ரோபோனிக் கஞ்சா 
தமிழக செய்திகள்

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ. ரூ.97 லட்சம் மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்

பொட்டலங்களை அதிகாரிகள் பிரித்து பார்த்தபோது, மண்ணில்லாமல் நீர் மூலம் பயிரிடப்பட்ட உயர் ரக கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னை,

துபாயில் இருந்து சென்னைக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சென்னை சுங்கத்துறை விமான புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய உளவுத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, நேற்று துபாயில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமான பயணிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த இந்திய ஆண் பயணி ஒருவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.ரூ.97 லட்சம் கஞ்சா சிக்கியது.

பச்சை வழித்தடம்

அவர் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல், ‘பச்சை வழித்தடம்’ வழியாக நைசாக வெளியேற முயன்றார். உடனே அதிகாரிகள் அவரை மடக்கி பிடித்து, அவரது உடைமைகளை அங்குள்ள தனி அறைக்கு கொண்டு சென்று விரிவாக பரிசோதித்தனர். அப்போது அவரது பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சில பொட்டலங்கள் சிக்கின.

ரூ.97 லட்சம்

பொட்டலங்களை அதிகாரிகள் பிரித்து பார்த்தபோது, மண்ணில்லாமல் நீர் மூலம் பயிரிடப்பட்ட உயர் ரக கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போதைப்பொருள் கண்டறியும் நவீன கருவியை கொண்டு சோதித்ததில், அது கஞ்சா தான் என்பது உறுதி செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட 2,794 கிராம் எடையுள்ள இந்த போதைப்பொருளின் சர்வதேச கள்ளச்சந்தை மதிப்பு சுமார் ரூ.97 லட்சம் ஆகும்.

பயணி கைது

இதனை தொடர்ந்து, போதைப்பொருள் மற்றும் மனநல பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் ரூ.97 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், போதைப்பொருள் கடத்தி வந்த அந்த பயணியை அதிகாரிகள் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இது குறித்த மேல்விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT