சென்னை,
டிஜிட்டல் தளங்களில் வெளியாகி வரும் தேர்தல் முடிவுகள் குறித்த பல்வேறு ஊடகங்களுக்கும் விமர்சனங்களுக்கும் பதிலளிக்கும் வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகனும் போபுலஸ் எம்பவர்மென்ட் நெட்வொர்க் (PEN) அமைப்பின் நிறுவனருமான சபரீசன் வேதமூர்த்தி விரிவான அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், மக்களின் தீர்ப்பை முழு பணிவுடன் ஏற்பதாக குறிப்பிட்டுள்ள அவர், ஒரு பெரிய அரசியல் முடிவை அல்லது தேர்தல் தோல்வியை ஏதோ ஒரு குறிப்பிட்ட ஒற்றை காரணியாக சுருக்கி, அதன் முழு பொறுப்பையும் தங்களின் PEN அமைப்பின் மீது மட்டும் சுமத்த முயல்வது யதார்த்தத்திற்கு புறம்பானது என்று தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தில் தேர்தல் முடிவுகள் என்பது அரசியல், சமூக, அமைப்பு மற்றும் மக்களின் மனநிலை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தீர்மானிக்கப்படுபவை என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்த சூழலில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி கொள்ளாமல், தவறான தகவல்களையோ அல்லது தனிநபர் சார்ந்த தாக்குதல்களையோ பரப்பாமல் ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும், மக்களின் கருத்துக்களை கேட்டு, தங்களின் குறைகளை நேர்மையுடன் சுயபரிசோதனை செய்து கொண்டு முன்னேறுவதே தற்போதைய நோக்கம் என்றும் கூறியுள்ளார்.
மேலும், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் முடிவை அமைதியாகவும் தைரியமாகவும் எதிர்கொண்டு நேரடியாகக் கொளத்தூர் தொகுதி மக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த அரசியல் பண்பை தங்களுக்கு முன்மாதிரியாகக் குறிப்பிட்டுள்ள சபரீசன், தங்களின் PEN குழுவின் கடின உழைப்பை பாராட்டுவதோடு, இந்தத் தேர்தல் முடிவில் தன் தரப்பில் ஏதேனும் தவறு அல்லது பங்கு இருந்திருந்தால் அதற்கான பொறுப்பை தான் ஏற்க தயாராக இருப்பதாகவும், இனிவரும் காலங்களில் மக்களின் எதிர்பார்ப்புகளை இன்னும் ஆழமாக புரிந்து கொண்டு தொடர்ந்து பொறுப்புடன் உழைக்க போவதாகவும் தனது அறிக்கையில் மிக அழுத்தமாகப்பதிவு செய்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.