தமிழக செய்திகள்

கைதுக்கு பயப்படுபவன் நான் அல்ல - உதயநிதி ஸ்டாலின்

பேசாத ஒன்றை பேசியதாக பொய் பரப்புகின்றனர் என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தின்போது ஆபாசமாக பேசியதாக எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரை போலீசார் தஞ்சைக்கு அழைத்துச்செல்கின்றனர்.

இதற்கிடையே செய்தியாளர்கள் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது;

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என ஆர்ப்பாட்டத்தில் பேசினேன். டம்மி முதல்வருக்கு ரீல்ஸ் வெறி முற்றிப் போய் உள்ளது. முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ரீல்ஸ் வெறியில் உள்ளனர்.

நான் பேசாத ஒன்றை பேசியதாக கட், காப்பி, பேஸ்ட் பன்னி பொய் செய்தி பரப்புகின்றனர். என் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன். இதற்கெல்லாம் பயப்படக்கூடிய ஆள் நான் கிடையாது.

திமுகவின் கடைசி தொண்டன் கூட கைதுக்கு பயப்படுபவர்கள் கிடையாது. காவிரி பிரச்சினையை திசை திருப்ப என் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது நடவடிக்கையை சட்டப்படி எதிர்கொள்வேன்.”

இவ்வாறு அவர் பேசினார்.