செங்கல்பட்டு,
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவும் அபார வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், வெற்றி வேட்பாளர் மரகதம் குமரவேலை அமைச்சர் சரத்குமார் மற்றும் த.வெ.க. நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மரகதம் குமரவேல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;-
“மதுராந்தகம் தொகுதி வாக்காளர்களுக்கு கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றிருப்பதற்கு முழு காரணம் தமிழக முதல்-அமைச்சர் விஜய்தான். அவரது முகத்திற்காக தான் இந்த வாக்குகளை நான் பெற்றுள்ளேன்.
எதிர்க்கட்சிகள் எவ்வளவு பொய் பிரசாரம் செய்தாலும், தமிழக வெற்றிக் கழகம் மீது மதுராந்தகம் தொகுதி மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகவில்லை. முதல்-அமைச்சர் விஜய் இரண்டு முறை மதுராந்தகம் தொகுதிக்கு வந்து பிரசாரம் செய்தார். மக்கள் சிந்தித்துதான் வாக்களிக்கின்றனர். அதன்படி மக்கள் இப்போது நல்ல தீர்ப்பை கொடுத்திருக்கிறார்கள்.
மதுராந்தகம் தொகுதியில் நான் பிரசாரத்திற்கு சென்றபோது மக்கள் என்னை தங்கள் வீட்டு மகளாக, சகோதரியாக மனமகிழ்ச்சியோடு வரவேற்றார்கள். மதுராந்தகம் தொகுதி மக்களின் மனதில் நான் இருக்கிறேன். அதேபோல் அவர்களும் என் மனதில் இருக்கிறார்கள்.
நான் தளபதி விஜய்யின் தங்கச்சி. அவருக்கு எத்தனையோ நெருக்கடிகள் வந்தன. அதையெல்லாம் அவர் எளிதாக கடந்து வந்தார். அவரது வழியில் வந்த நாங்கள் விமர்சனங்களை நேர்மையாக எதிர்கொண்டோம். மக்களிடம் சென்று எதற்காக நான் அ.தி.மு.க.வில் இருந்து வெளியே வந்தேன் என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறேன்.
பொய்கள் எப்போதும் ஓங்குவதில்லை, உண்மைகள் எப்போதும் தூங்குவதில்லை என்ற புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பாடல்போல், இன்று உண்மைக்கு வெற்றி கிடைத்துள்ளது. எனவே பொய் பிரசாரம் எப்போதும் மக்களிடம் எடுபடாது. த.வெ.க. கூட்டணி கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் நல்ல ஆதரவை வழங்கி பக்கபலமாக இருந்தார்கள். த.வெ.க. தொண்டர்கள் பலமாக இருந்தனர். அதனால்தான் இன்று இந்த வெற்றி கிடைத்துள்ளது.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.