சென்னை,
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் புதிதாக அமைந்ந்துள்ள தவெக அரசின் ஆட்சி, செயல்பாடுகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த வைகோ கூறியதாவது,
தவெக ஆட்சி, அதிகாரத்திற்கு வந்து சில நாட்கள் தான் ஆகிறது. அதற்குள் எதையும் கணிக்க முடியாது. 6 மாதம் செல்லட்டும்... அதற்குப்பிறகுதான் அமைந்திருக்கும் அரசு எவ்விதம் இயங்குகிறது என்று கருத்துகளை தெரிவிக்க இயலும். இந்த சில நாட்களுக்குள் எந்த கருத்தையும் தெரிவிக்க இயலாது.
பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் எல்லா ஆட்சி காலங்களிலும் நடந்துகொண்டிருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றால் நீதிமன்றங்கள் குற்றஞ்சாட்டப்பட்ட கூண்டிலே நிறுத்தப்படும் கயவர்களுக்கு ஜாமின் (பிணை விடுதலை) கொடுக்கவே கூடாது.
சில நிகழ்வுகளில் ஜாமினில் வெளியே வந்தவன்தான் சிறு பெண் பிள்ளைகளை நாசப்படுத்தி கொலை செய்கிறான். அவன் எப்படி சிறையில் இருந்து வெளியே வந்தான். ஆகவே நீதிமன்றங்கள் இப்படிப்பட்ட குற்றஞ்சாட்டப்பட்ட கயவர்களுக்கு பிணை விடுதலை கொடுக்கவே கூடாது.
பெண்கள், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யும் கொடியவர்களுக்கு வாழ்நாள் சிறை என்ற தண்டனை இருக்க வேண்டும். ஆயுள் தண்டனை என கூறிவிட்டு 10 ஆண்டுகளில் விடுதலை செய்யக்கூடாது. வாழ்நாள் முழுவதும் சிறை என்ற சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும். அந்த சட்டத்திற்கு மத்திய அரசு அங்கீகாரம் தர வேண்டும். இதன் மூலம் அச்சத்தை உருவாக்கி இந்த கொடிய மிருகங்களுக்கு பாடம் கற்பிக்க முடியும். திமுக கூட்டணியில் மதிமுக தொடர்ந்து நீடிக்கிறது.
என்றார்.