திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதில் த.வெ.க.. தி.மு.க., அ.தி.மு.க.. நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி என 5 முனை போட்டி நிலவுகிறது. தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதல்-அமைச்சர் விஜய் இன்று 'ரோடு ஷோ'-வில் ஈடுபட்டு வருகிறார். ரோடு ஷோவுக்கு இடையே திறந்த வேனில் நின்றபடி முதல் அமைச்சர் விஜய் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: ஒரே ஒரு உண்மையை மட்டும் சொல்லிவிட்டு போகிறேன். நான் அன்று பேசும் போது சொல்லியிருந்தேன். திமுகவுக்கும் மற்றும் பலருக்கும் ஓட்டு போட்டீர்கள் என்றால் பெண்களை அசிங்க அசிங்கமாக பேசுபவர்களை நாம் ஆதரிப்பது போல ஆகிவிடும் என்று சொல்லியிருந்தேன். நம்ம வீட்டு பெண்கள், நமது அம்மா, அக்கா, தங்கைகளை அவதூறாக பேசுபவர்களை நாம் ஆதரிக்கிற மாதிரி ஆகிடும் என்று சொன்னேன்.
நான் வெறும் ஓட்டிற்காக மட்டும் அதை சொல்லவில்லை. நேற்று முன் தினம் ஸ்டாலின் வந்து என்ன பேசிவிட்டு சென்றார். அப்பாவும் புள்ளையும் தாராபுரத்திற்கு வந்து, தயவு செய்து திமுகவிற்கு ஓட்டு போடாதீங்க..கோடானு கோடி நன்றி..கோடானு கோடி நன்றி என இப்பவே சொல்லிவிட்டு போய்விட்டார்கள். என்ன பேச்சு பேசிவிட்டு போயிருக்கிறார். சத்யபாமா குறித்து பேசியதை காது கொடுத்து கேட்க முடியாது. மறப்பது போலவா..பேசிவிட்டு போயிருக்கிறார்.
அவர் மட்டுமா இப்படி பேசுகிறார். அவர் வளர்த்து வச்சிருக்கிற எல்லாரும் இப்படிதான் பேசிட்டு போறாங்க; என்னைப்பற்றி என்ன வேண்டுமானாலும் பேசிவிட்டு போங்க..நான் அதை பொறுத்துப்பேன். ஆனால் நம்ம சகோதரியை பற்றியோ நம்ம வீட்டில் இருக்கும் அம்மா அக்கா தங்கைகளை பற்றி பேசினால் நான் சும்மா இருக்க மாட்டேன் தேர்தலுக்காக இல்லை எப்போது வேண்டுமானாலும் மக்களை பார்க்க வருவேன்”என்றார்.